குரங்கும் இடமும்

'குரங்கு என்று தொடங்கி இடம்’ என்று முடியுமாறு ஒரு செய்யுள் செய்க என்றார் ஒருவர். அவருக்கு அதே குறும்புடன் பாடல் சொல்கிறார் காளமேகம்.

நேரிசை வெண்பா

குரங்கனலில் வீழ்ந்து வெறிகொண்டு தேள்கொட்ட
கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வ - விரைந்துபோய்ப்
பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்
எத்தனைபார் சேட்டைக்(கு) இடம். 43

– கவி காளமேகம்

பொருளுரை

ஒரு குரங்கானது நெருப்பிலே வீழ்ந்து விட்டது. அதனால் வெறிகொண்டதாயிற்று. அப்போது ஒரு தேள் அதனைக் கொட்டிற்று. பாம்பு ஒன்று அதன் கையிலே சுற்றிக் கொண்டது. நண்டு வேறு அதனைக் கவ்வியது. அதன் நிலையைக் கண்டு பேயொன்றும் விரைந்து சென்று அதனைப் பற்றிக் கொண்டது. அதன்பின், கள்ளினையும் அது குடித்தது. இத்தனையும் போதா வென்று, அந்தக் குரங்கு பச்சை மிளகையும் கடிக்குமானால், அதன் சேட்டைகளுக்கு இடமாவன எத்தனை? அதனை நீயே நினைந்து காண்பாயாக!

‘நீயே பார்' என்றது, அந்தப் புலவரைக் குறும்பாகச் சொன்னதாம். நீயே! செய்து பார்’ எனச் சொன்னதும் ஆம். இதன் உட்கருத்து நும் குரங்குச் சேட்டைகட்கு யாம் அஞ்சோம்' என்பதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Feb-20, 9:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

சிறந்த கட்டுரைகள்

மேலே