நெஞ்சமும் நிறைந்திட வேண்டும்

நெஞ்சமும் நிறைந்திட வேண்டும்

ஓய்வின் பகுதிநேர வேலையாக
சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி
உலர்ந்த நினைவுகளை நெஞ்சின்
ஈரத்துளிகளால் அலசிய எனக்கு
நிழலாகத் தெரிந்தது நிகழ்வுகள்
நிறம் மாறாத நிஜங்கள்
தேய்ந்த வடிவில் கறைகள் ....

பால்ய பருவமோ பசுமையாய்
இளமைக் காலமோ இனிமையாய்
வாலிபப் பொழுதுகள் வசந்தமாய்
சுமைமிகு பணிகளும் சுகமாய்
அலுவலக நேரங்களும் ஆனந்தமாய்
தழுவிச் சென்றன தென்றலாய்
வருடிக் கொடுத்தன வாஞ்சையாய் ...
உள்ளத்தைத் தொட்டது பலவகை
இதயத்தை இறுக்கியது சிலவகை
சிலிர்க்கவும் வைத்தது சிந்தையை
உறையவும் செய்தது குருதியை ...

முடிந்ததை நினைத்து முனகுவதும்
முற்றுப் பெறாததற்கு வருந்துவதும்
குறைகள் குன்றாகிட வழியன்றோ ...
ஞாலத்தில் வாழும் நொடிவரை
காலமும் கழிந்திட வேண்டும்
தேகமும் குன்றாத வகையில்
வேகமும் குறையா நிலையில்
தேசமும் வாழ்ந்திட வேண்டும்
நேசமும் வற்றாத பெருங்கடலாய்
நெஞ்சமும் நிறைந்திட வேண்டும் !

பழனி குமார்
03.03.2020

எழுதியவர் : பழனி குமார் (3-Mar-20, 9:36 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 517

மேலே