இயல்பாய் வளரவிடுங்கள் மனிதர்களே
இயல்பாய் வளரவிடுங்கள் மனிதர்களே !
தொட்டிக்குள் வரிசையாய்
நின்று கொண்டிருக்கும்
நாங்கள் !
வீட்டிற்கு வந்திருந்த சிலர்
இது என்ன மரமா செடியா ?
எங்களை வளர்ப்பவர்
பெருமையாய் சொல்கிறார்
இவைகள் மரங்கள் !
இத்தனை குட்டையாய்
அதுவும் தொட்டிக்குள் ?
இதுதான் போன்சானியாவோ
மான்சானியாவோ எங்களுக்கு
புரியவில்லை !
நாங்கள் கேட்பது ஒன்றுதான்
இயல்பாய் வளரவிடுங்கள்
நெட்டையை குட்டையாக்கி
குட்டையை மட்டையாக்கி
ஒட்டு செடி என்று
கத்தரிக்காயில் தக்காளி வைத்து
நீங்கள் மட்டும் உங்களை
இயல்பாக வளரவிடாமல்
இப்படி செய்தால்..!
நெட்டையை குட்டையாக்கி
கையிருக்கும் இட்த்தில்
காலை ஒட்டு வைத்து !
உங்களின் பெருமை பேச
எங்களை குள்ளமாக்கி
சிங்கத்தை சிறு நரியாய்
காட்ட முயலாதீர்கள்
எங்களின் விதைகளில்
நாங்கள் எப்படி வருவோம்
இயற்கை நிர்ணயித்திருக்க
நீங்கள் யார் இதை மாற்ற ?