என்னோடு உறங்கிய நிழல்
.
என்னோடு உறங்கிய நிழல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்கின் ஆதி வெளிச்சத்தை
துயிலெழுப்ப இருளின் நுனிக் கிளையொன்றில் விழித்திருந்த கடைவாயின் எச்சில் ஒழுகிய
முத்தமொன்றை அம்பென எய்கிறது ஆற்றாமை
இன்னும் விடியாத
வெறும் படுக்கையின்
கடைசி விளிம்பு வரை துலாவும்
கனவின் பெருவிரல்கள்
பிரபஞ்சக் கற்பனையில்
அலைந்த அதிகாலைக் கனவு
கட்டி இழுத்து வருகிறது
ஆடை களைந்த
உன் பெருவெளியை
கனவின் தேகமெங்கும்
நெடிதுயரும் பேரலை
மோதிச் சிதறுகிறது
பேரன்பின் பாறைகளில்
தெறித்து வீழும் திவளைகளில்
துடிக்கும் தினவின் குஞ்சுகள்
கனவின் பேரலை முகடுகளுக்கு
மேலே கழுகெனப்
பறந்துகொண்டிருந்தது
உந்தன் நினைவுகளோ ?
என்னை உறக்கம் கலைத்து
என் படுக்கை விரிப்பில்
கசங்கிச் சுருண்டு கிடக்கிறதே
ஜன்னல் வழி
ஊடுபரவும் ஒளியில்
உன் நிழல் ... 💋