துப்பாக்கிக்கும் ஓலைச் சுருளுக்கும்
நேரிசை வெண்பா
ஆணி வரையுறலால் ஆனகுறிப் பேதரலால்
தோணக் கருமருந்தைத் தோய்ந்திடலால் - நீணிலத்தில்
செப்பார்க் குதவாத் திருமலைரா யன்வரையில்
துப்பாக்கி யோலைச் சுருள். 66
- கவி காளமேகம்
பொருளுரை:
நெடிதான இந்த உலகத்திலே தன்னைப் போற்றிச் சொல்லாத புலவர்க்குப் பயன்படுதல் இல்லாத திருமலைராயன் என்பவனின் மலைச்சாரலில் துப்பாக்கியும் ஒலைச்சுருளும் ஒன்றற்கொன்று சமானமாகும். எங்ஙனமெனில்,
துப்பாக்கியானது: இருப்புச் சலாகையைத் தன்பாற் கொண்டிருத்தலாலும், மேற்கொண்ட குறியினையே தாக்கி வெற்றி தருதலாலும், மிகுதியான கருமருந்தினைப் பொருந்தியதாக இருப்பதனாலும்,
ஓலைச் சுருளானது: எழுத்தாணி கொண்டு எழுதப்படுதலை உடையதாதலாலும், தன்னிடத்தே எழுதப்பட்டதாகிய குறிப்பைப் பெறுவோனுக்குத் தருகின்றதனாலும், தன்னிடத்தே எழுதப்பட்டவை நன்கு புலனாகுமாறு கைக்காப்புச் செய்யப் பெறுதலை உடையதாதலாலும் ஆகும்