கலியுகம்

சூரியன் எப்போதும்போல உதிக்கிறது,
சித்திரை வெயில் அதே சினத்தோடு சிலாகித்திருக்கிறது,

வானத்தின் விசாலம் விரிந்ததாய் படவில்லை,
கிழக்கும் மேற்குமாய் காக்கைகள் கரைவதை விட்டு விட்டு, 
வானத்தில் வண்ணம் தீட்டுகின்றன.

உணவருந்தும் வேளையிலே,
தென்னைமரத்தில் அணில் ஒன்று சதா கத்திகொண்டே இருக்கிறது.

எந்த பறவையும் அமராத பாதானி மரத்தில்,
தினந்தோறும் பச்சை கிளிகள் காட்சியளிக்கிறது.

தெம்பாய் குலைத்து திரியும் தெரு நாய்கள்,
சோம்பிப்போன மனிதர்கள் போல், சிந்தித்தபடி உலாத்துகிறது.

மாலை வேலையில் மாற்றமே இல்லாத மஞ்சள் வெயில் மங்கி மங்கி, கல்லாய் மாறிப்போன மனதை கரைக்கிறது.

சூரியன் மறைய,
இருள் கவ்வநினைக்கும் வேலையை உணர்ந்த பால் நிலா,
வெள்ளிச் சுருள்களை ஆடையாய் உடுத்தி 
வீதி உலா வரவது வாடிக்கையாகி இருக்கிறது.

நடு சாமத்தில் மணி கட்டிய பசு மாடு, 
இரைதேடி வீடு வீடாய் ராப்பிச்சை காரன்போல் 
ஓயாமல் அலைந்து திரிகிறது.

மதியம் பனிரெண்டு மணிக்கு மேல்,
தெருவே அமைதியாகி போகிறது.
வீடோ அமைதி இழக்க ஆரம்பிக்கிறது.

இந்த பேரிடரால்,
இயற்கையை எதுமே செய்ய முடியவில்லை ,
ஒரு சிறு துன்பமோ, அச்சமோ காண முடியவில்லை.
மாறாக இயற்கையின் புனிதம்
வெகுவாக கூடி இருக்கிறது.

இப்படி இருக்க,
மனிதர்களின் நிலையிலோ
பெரும் மாற்றம்,
ஏமாற்றம், துன்பமும் துயரமும்
தீயாய் பற்றி எரிகிறது.

பல பல ஆண்டுகளாய் வெறியோடு,
வேலை வேலை என்றிந்தவர்கள்
வீட்டினுள் என்ன செய்வதென்று தெரியாமல்,
எல்லாவற்றையும் செய்ய முனைகின்றனர்.

மனைவி தொடப்பமெடுத்து,
அறைவாரியாக பெருக்கி பெருக்கி,
ஒரு ஓரத்தில் குப்பையை சேர்த்துவைக்கிறாள்.
குப்பையை அள்ளிவிட கணவனை 
அழைக்க நினைப்பதற்கு முன்,
கணவன் கதவுகளையும், ஜன்னல்களையும் 
வெளிச்சம் வேண்டி திறக்கிறான்,
குமித்து வைத்த குப்பை,
அறையெங்கும் விரவி நிறைகிறது.

மனைவியின் வீணாகிப்போன உழைப்பும்,
கணவனின் காலந்தாழ்த்திய விவேகமும்,
ஒன்றை ஒன்று ஏளனம் பேசி,
பேச்சு வார்த்தையை துண்டிக்கிறது.

மறுபுறமோ,திடீரென்று குழந்தையை அழைத்து,
திருக்குறள் கற்றுக்கொடுக்க முனைத்து,
அதட்டி அதட்டி அருகில் அமரவைத்து,
குரல்வளை ஓடிய கத்தி சொல்லியும்,
குறள் குழந்தையின் குரலில் ஒலிக்க மறுக்கின்றது,
குழந்தையும் அச்சத் தொற்றுக்கு ஆளாகிறது.

கணவனும், மனைவியும் 
மனம் விட்டு பேசலாமென்று 
எதை பற்றி பேசமுயன்றாலும்,
பேச்சின் முடிவில் வெறுப்பும்,
கசப்பும் எஞ்சி நிற்கிறது.

அழகாய் இருந்த வீடுகள்,
பணியாளர்கள் இல்லாததால் 
பாழடைந்த வீடாய் மாறுகிறது.

இப்படி சில குடும்பங்கள் இருந்தாலும்,
எங்களை போன்ற ஐ டி பணியாளர்கள் 
வீடுகளை அலுவலகமாக்கி 
எங்களின் வாடிக்கையாளர்களின் சோகத்தை
துடைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒன்பது மணி நேர வேலை இப்போது,
பல மணி நேரம் அதிகரித்து விட்டது.
சனியும், ஞாயிறும் வருகிறதா என்றே தெரியவில்லை.

இது ஒருபுறம் இருக்க,
சில கேள்விகள் வந்து வந்து
போவதை தவிர்க்க முடியவில்லை !

இந்த நிலை ஏன் வந்திருக்கும்?
வீட்டுச் சிறையில் குடும்பம் அருகிலிருந்தும்,
நன்கு படித்திருந்தும்,
கையில் பணமிருந்தும்,
ஒரு வித அச்ச உணர்வோடு ஏன் இருக்கிறோம்?

இந்த அச்சத்தோடு எப்படி,
சந்தோசமாய் வாழமுடியும்?

யார் காரணம்?  

இதுவா கீதை சொன்ன கலியுகம்?
எதையும் கல்வியால்,
விஞ்ஞானத்தால் கட்டுப்படுத்த முடியும்
என்று நம்பிகைக்கு சவால் விடுவது யார்?

இயற்கையா?
அது சொல்லித் தர முயலும் செய்தி என்ன?

எதற்கு கல்வி கற்கவேண்டும்?
அறிவை பெருக்க !

அறிவை எதற்கு பெருக்கவேண்டும்?
ஒழுக்கத்தோடு வாழ !

ஒழுக்கத்தோடு வாழ்ந்தால்?
அன்பை பெற்று, பரப்ப முடியும்!

அன்பை பரப்பினால்?
இந்த உலகமே அருளால் நிறையும்?

அருளால் நிரம்பிய உலகத்தில்
வாழும் அனைத்து ஜீவராசிகளும்
துறவு நிலை அடைந்து,
கடவுளாய் காட்சியளிப்பர்.

கடவுளாய் மாறிய சமூகத்தில்
கொரோன வைரஸ் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

ஒவ்வொரு முறையும்,மனிதர்கள்
மனிதத்தன்மை இழந்து,
இயற்கையை புறம்தள்ளும் பொழுது,
இயற்க்கை வெகுண்டு எழுந்து,
ஒழுக்கமில்லாத அறிவை கொண்டுள்ள 
கல்வியாளர்களிடமும் , விஞ்ஞானிகளிடமும் 
சவால் விட்டு தோற்கடிக்கிறது
என்பது நிதர்சன உண்மை.

அன்பே சிவம் !

எழுதியவர் : Ganeshkumar Balasundaram (12-Apr-20, 5:30 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 538

மேலே