மீதிப்பணம்

என்னம்மா ஆபரேஷனுக்கு கட்ட வேண்டிய பணத்துல அம்பதாயிரம் பென்டிங்னு சொல்றாங்க

ஆமா சார்.என் புருஷன் அந்த பணத்தை ரெடி பண்ணி கொண்டுட்டு வர தான் போயிருக்காரு. நீங்க ஆபரேஷன ஆரம்பிங்க சார்

அதெல்லாம் முடியாதுமா மீதி பணத்தை கட்டுங்க அதுவரைக்கும் ஆபரேஷன தள்ளி வச்சிடுவோம்

அப்படில்லாம் சொல்லாதிங்க சார் என் பொண்ணு அங்க சாகக் கிடக்குறா சார்

தெரியுது இல்லம்மா.அப்ப பணத்த ஒழுங்கா கட்ட வேண்டியது தானே. பெத்தவங்க நீங்களே இப்படி பொறுப்பில்லாம நடந்துகிட்டா நாங்க என்ன பண்றது

பிச்சையெடுக்காத குறையா எல்லா எடத்துலயும் புரட்டி இரண்டரை இலட்சம் கட்டியிருக்கோம் சார்.மீதிப் பணத்த எங்க தலைய அடமானம் வச்சாவது கட்டிடறோம் தயவு செய்து பெரிய மனசு பண்ணுங்க சார் காலில் விழச் சென்றவளை அதட்டி

பெரிய மனசு பண்ணி தான் உங்களுக்கு ஒருவாரம் டைம் கொடுத்தேன்.உங்கள மாதிரி பத்து பேருக்கு நான் பெரிய மனசு பண்ணா ஆஸ்பிடல இழுத்து மூடிட்டு ரோட்ல ஒக்கார்ந்துக்க வேண்டியது தான்

சார் ஆபரேஷன ஆரம்பிங்க சார்.நிச்சயமா பணத்தை கட்டிடுவோம் சார்.அவர் காலை பிடித்துக் கொண்டாள்

போம்மானு சொன்னா கேக்கமாட்டியா.முதல பணத்தை கட்டிட்டு வந்து என்கிட்ட பேசு அவர் விடைபெற்றார்

அவள் அழுதவாறே வெளிவரும் போது அவள் கணவன் எதிரே வந்துக் கொண்டிருந்தான்

சாரதா என் ப்ரண்ட் பாலுவ பார்த்து பேசினேன். அவன் பேங்க்ல இருந்து பணத்தை எடுத்துகிட்டு பின்னாடியே வர்றதா சொன்னான்.நீ ஒன்னும் கவலைப்படாத நம்ம பொண்ண காப்பாத்திடலாம்

நேரம் கடக்க கடக்க இருவருக்கும் பதட்டம் அதிகமாகியது.

என்னங்க இன்னும் ஆளக் காணோம்

பேங்க்ல கூட்டமா இருக்கும்னு நினைக்கிறேன் வந்துடுவான்

நர்ஸ் ஒருத்தி அவ்வப்போது வந்து அவர்களை பயமுறுத்தியபடியே இருந்தாள்

ஏம்மா குழந்தைக்கு இருக்க இருக்க சுவாசம் கம்மி ஆயிட்டே இருக்கு சீக்கிரம் பணத்தை கட்டுங்கம்மா

இதோ பணத்தை எடுத்துட்டு வர்றாங்க அவளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்

நீண்ட நேரம் கழித்து ஒரு போன் கால் வந்தது

அவர் வெளியே வந்து பேசத் தொடங்கினார்

டேய் பாலு பணத்தை எடுத்துட்டியா எங்கடா வந்திட்டிருக்க கொஞ்சம் சீக்கிரமா வாடா

சாரிடா

டேய் என்னடா ஆச்சு

பேங்க்ல இருக்கறது ஜாய்ன்ட் அக்கௌன்டுடா.அதனால என் மனைவி கையெழுத்து இல்லாம பணத்தை எடுக்க முடியாதுனு சொல்றாங்க

டேய் அப்படி சொல்லாத டா.என் மக சாகக்கிடக்கறாடா.தயவு செஞ்சு போன உன் மனைவிகிட்ட கொடுடா.நான் பேசுறேன்

அவன் குரல் மௌனமாக யாரையோ பின்புறம் அதட்டியது

என்னங்க நகைக் கடைக்கு எப்ப போலாம்னு கேட்டதுக்கு இப்படி சீறுறிங்க

பின் அவன் என்னிடம், இல்லடா நான் எவ்வளவோ பேசி பாத்துட்டேன். அவ அம்மாக்கு ஏதோ ஆபரேஷன் செலவுக்கு அந்த பணம் வேணும்னு சொல்றா சாரிடா

நான் போனை அணைத்துவிட்டு உள்ளே நுழைந்த சமயம்

என் மனைவி கதறி அழுவது என் காதுகளில் விழுந்தது

இதயக் கோளாறால் மட்டும் என் மகள் இறக்கவில்லை, சில இதயமில்லா மனிதர்களாலும் தான்

முற்றும்.

எழுதியவர் : S.Ra (24-Apr-20, 6:32 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 85

மேலே