முதல் ஆதிவாசி பெண் கலெக்டர்
கூரை வீட்டில் பிறந்து விட்டோமே
கரையேறி கனவுகளை நனவாக்க செய்வோமோ ?
ஆதிவாசி பெண்ணாய் பிறந்து விட்டோமே..?
அதிகாரத்தை பிடிக்க வழியில்லாமல் போகுமோ..?
கூலிவேலையே கதியென்று கிடக்கின்றோமே - இதில்
கல்விமுடித்து கலெக்டராக முடியுமோ? -என்ற
எதிர்மறை எண்ணங்களை தூக்கி எறிந்தேன்
'என்னால் முடியும்' என்கிற உணர்வினை
என் கனவிலும் நனவிலும் அழுத்தமாய்
எனக்குள் நம்பிக்கையின் துணையோடு வளர்த்தெடுத்தேன்
ஒருநாள் கனவிற்கான தேர்வும் வந்தது
ஒருவரிடம் மட்டுமல்ல பலரிடமும் கடன்வாங்கி
வெல்லும் நோக்கிலே டெல்லிக்கு சென்றேன்
வெற்றியுடனே தேர்வினை எழுதி முடித்து
வயநாடு திரும்பினேன் - வாங்கிய கடன்தீர்க்க
மீண்டும் கூலிவேலை செய்தேன் - அத்தருணத்தில்
வெற்றி பெற்றவர்களின் பெயரினை வெளியிட்டார்கள்
அன்று- என் ஆதிவாசி மக்கள்மட்டுமல்ல
அனைத்து இந்தியாவுமே திரும்பி பார்த்தது -
முதல் வரலாற்றினையும் பதிவு செய்தது
முதல் ஆதிவாசி பெண் கலெக்டரென்று-
தான்யா... தான்யா.. என்று கொண்டாடியது -இது
தான்யா என்ற தனிப்பெண்ணின் வெற்றியல்ல
தன்னம்பிக்கையோடு வெளிவந்த ஆதிவாசி பெண்ணின்
தலைசிறந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி
என் முயற்சியின்போது இந்த உலகம்
என்னை புழுவாய் பார்த்தது - ஒருநாள்
என் வளர்ச்சி தெரிந்தபோது - இவ்வுலகம்
என்னை பட்டாம்பூச்சியாய் அதிசயித்து பார்க்கின்றது..
"நான் புழுதான் - ஆனால் ஒருபோதும்
மண்ணில் புதைந்து போக கூடியவளல்ல
விண்ணிலே சிறகடித்து பறப்பவள் - பல
வண்ணங்களோடு பட்டாம்பூச்சியாய் வாழ்பவள்"
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி