எப்பவும் இட்லி, தோசைதானா

எப்பவும் இட்டிலி, தோசை தானா?

'தினமும் காலையிலே எழுந்தா இட்லி, இல்லை தோசை. இந்த மிடில் கிளாஸ் லைஃபே ரொம்பப் போரடிச்சிப் போச்சு. இன்னிக்கு ஒரு நாளாவது ஒரு நல்ல ஹோட்டலுக்குப் போயி நமக்குப் பிடிச்ச எல்லா ஐடங்களையும் ஒரு பிடி பிடிச்சிட்டி வரணும். என்னமோ எல்லாம் சொல்றாங்களே நூடில்ஸா இல்லை நீடில்ஸா, ஆலு டிக்கியா இல்லை டிமிக்கியா இதை எல்லாம் இன்னிக்கு ஒரு கை பாத்துட வேண்டியதுதான்
எதுக்கும் கிரெடிட் கார்டை எடுத்துப்போம்.
ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குப் போவோமா?
வேணாம் ரொம்ப காஸ்ட்லி. அங்கே போய் ஒரு வேளை சாப்பிடற செலவுலே ஒரு மிடில் கிளாஸ் ஹோட்டலுக்குப் போனா மூணு நாள் முழுசா சாப்பிடலாம்.
த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்குப் போவோமா?
சரி . போய்ப் பார்ப்போமே. எப்பதான் இதையெல்லாம்அனுபவிக்கிறது ? லைஃபை கொஞ்சமாவது எஞ்சாய் பண்ண வேண்டாமா?
சரி. இன்னிக்கு ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்கே போவோம்'.
*****
இப்படி நினைத்து அருகிலிருந்த ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்தேன் வாழ்க்கையிலேயே முதல் முறையா. அங்கே ரெயில்வே ஸ்டேஷன் கௌண்டர் மாதிரி சாட்டுக்கு வெயிட் பண்ற கும்பலைப்பத்து நான் மிரண்டே போயிட்டேன். ஒரு அரைமணி நேரத்துக்குப்பிறகு ஒரு வசதியான சீட் பிடித்து உட்கார்ந்தேன். அதற்குள் ஒரு சிறு சபலம். ஏன் ஏசி ரூமில் போய் உட்காரக்கூடாது என்று தோன்றவே பக்கத்திலிருந்த ஏசி ரூமில் போய் உட்கார்ந்தேன்.. அங்கு டேபிளில் மெனு கார்டைப் புரட்ட ஆரம்பித்தேன். எப்படியும் இன்றைக்கு இட்லியோ தோசையோ ஆர்டர் செய்யப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு மெனு கார்டைப் பார்த்து என்ன ஐடம் ஆர்டர் பண்ணலாமென யோசித்தேன்.
ஸ்நாக்ஸ் லிஸ்டைப்பார்த்தேன்.
என்ன? பஜ்ஜி அறுபது ரூபாயா? நம்ம வீட்டிலே இந்த ருபாய்க்கு நாலு பேர் ஆளுக்கு அஞ்சு பஜ்ஜி சாப்பிடலாம்.
ஊஹூம். இது சரிப் பட்டு வராது.
சூப் ஏதாவது சாப்பிடுவோமா?
ஆனா சாயந்திர நேரத்துலே யாராவது சூப் சாப்பிடுவாங்களா? தெரியல்லியே.
என்ன ஒரு சின்ன டம்ளர் தக்காளி சூப் அறுபது ரூபாயா?
அறுபது ரூபாய்க்கு நாலு கிலோ தக்காளி வாங்கி வீட்டிலே கல்யாணமே பண்ணிடலாமே.
நூடில்ஸ் நூறு ரூபாயா? ஆலு மக்கி, இல்லை டிக்கி எண்பது ரூபாயா?
வெஜிடபிள் சூப், கேரட் சூப், காளான் சூப் விலையைப் பாத்தா தலையைச் சுத்துதே.
சரி. சூப், அப்பிடைசர் எல்லாம் தேவையில்லை.
சாட்ஸ் ஐடத்தைப் பார்ப்போமா? பாம்பே சாட்ஸா, கல்கத்தா சாட்ஸா?
ஆனா சோமு சென்னானே 'நம்ம பக்கமெல்லாம் சாட்ஸ் எதுவும் நல்லா இருக்கிறதே இல்லை. வட இந்தியாலதான் சாட்ஸ் எல்லாம் பிரமாதமா இருக்கும்னு'.
ஆமாம். சாப்பாட்டு விஷயத்துலே அவன் சொன்னா சரியாத்தான் இருக்கும்.
சைனீஸ் டிஷ் ஏதாவது செலக்ட் பண்ணுவோமா?
நமக்கு இந்த இட்லி தோசையைச் சாப்பிட்டு சாப்பிட்டு வேறே டிஷ்களைப் பத்தியெல்லாம் ஒரு எளவும் தெரிய மாட்டேங்குதே.
சப் சப்னு இருக்குமா, இல்லை காரசாரமா இருக்குமா? சாப்ஸ்டிக் வச்சி சாப்பிடணும்னு சொல்லுவாங்களே. நம்பளாலே முடியுமா? எதுக்காக ரிஸ்க் எடுக்கணும்?
நார்த் இண்டியன் டிஷ் ஏதாவது ட்ரை பண்ணுவோமா? நான், நீ ன்னு என்னவோ எல்லாம் இருக்கே. ஆனா இதையெல்லாம் ஸைட் டிஷ் இல்லாம சாப்பிட முடியாதே.
சைட் டிஷ் இருந்தாலும் வசக், வசக்குன்னு இதையெல்லாம் சாப்பிடறதுக்குள்ளே வாயே வலி எடுத்துப் போயிடுமே. இந்த நானை ஆர்டர் பண்ணினா அதை சாப்பிடறதுக்குள்ளே அதோட நீயா, நானான்னு சண்டையில்லே போடணும்.
****
சார். என்ன ஆர்டர் பண்ணுறீங்கன்னு சொல்லுங்க சார். நானும் பத்து நிமிஷமா உங்களைக் கேட்டுக்கிட்டு இருக்கேன். ஒண்ணும் சொல்லாமலே இருக்கீங்களே சார்.
கொஞ்சம் பொறு அப்பா. நான் யோசிச்சிச் சொல்றேன். நார்த் டிஷஸ்களோட சைட் டிஷ் விலையைப் பாத்தா சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம்கிற கதையாயில்லே இருக்கு.
ஆலூ மக்கர் -- அது என்ன எளவுன்னே தெரியல்லே- எண்பது ரூபாயாம்.
அது என்ன அது மட்டர் பன்னீர்? மட்டமான பன்னீரா இருக்குமோ? பன்னீரையும் வென்னீரையும் கூட சைட் டிஷ்ஷா பண்ணுவாங்களா என்ன? இதெல்லாம் என்னன்னு யாரைக் கேக்கறது? அப்படிக் கேட்டா நம்மை ஒரு மாதிரி பார்ப்பாங்களே.
அது என்ன கோஃப்தா?
என்ன நூறு ரூபாயா? அது எதுவா இருந்தாலும் வேண்டாம்.
இப்படி கொள்ளை அடிக்கிறாங்களே இவங்களையெல்லாம் கவர்மெண்ட் கேக்கக் கூடாதா?
கோபி மஞ்சூரியன் என்ன கோபி, என்ன மஞ்சு, என்ன சூரியன் யாருக்குப் புரியறது? விலை 120 ரூபாயாமே. இதெல்லாம் நமக்கு சரிப் பட்டு வராது.
*****
சார் என்ன சார்? எத்தனை நேரம் ஆச்சு. இன்னும் ஆர்டர் பண்ணாம உட்கார்ந்திருந்தா எப்படி சார்?
சரி. நான் யோசிச்சி ஆர்டர் பண்ணறதுக்குள்ளே வெலைவாசி ஏறிடப்போகுது.
இப்ப எல்லாம் ஜி.எஸ்.டிங்கறாங்க. என்னவோ எல்லாம் சொல்றாங்க. ஒரு எழவும் புரிய மாட்டேங்குது. இவன் வேறே தொந்திரவு பண்ணிக்கிட்டு இருக்கான். என்ன சாப்பிடலாம்னு யோசிக்கறதுக்கு டைமே தர மாட்டேங்கறானே.
***
சார் . நேரம் ஆறது சார். சீக்கிரம்
சொல்லுங்க சார்.
அடடா . என்னப்பா நீ வேறே.
(எதிர்லே இருக்கிறவன் குடும்பத்தோடே வந்து வகை வகையா சாப்பிடறான். ஆனா அது என்னன்னு தெரியல்லே. அவனைக்கேக்கலாம?
ஊஹூம். அது தப்பு. நம்ம தன் மானத்துக்கு இழுக்கு. இவன்வேறே அவசரப்படுத்தறானே. ஸ்டாப் ரைட்டிங்னு சொல்லும்போது பரீட்சை ஹால்லே உக்காந்து இருக்கற் ஸ்டூடண்ட மாதிரி டென்ஷனாகி ப்ரெயின் வேலை செய்ய மறந்து போயிட்டுது.)
ஒண்ணும் தோணவே மாட்டேங்குதே. மைண்டே ப்ளாங்க்காப் போயிட்டுதே.
***
சொல்லுங்க சார் சீக்கிரம். இப்ப நீங்க இந்த டேபிள்லே உக்காந்தே அரை மணி ஆயிட்டுது. இன்னும் ஒண்ணும் சொல்லாம கம்னு இருந்தா எப்படி? நான் இன்னும் எத்தனை டேபிளை பார்க்கணும். சீக்கிரமா சொல்லுங்க
***
ஏற்கெனவே குழம்பிப்போயிருந்த என்னை அவன் படுத்திய அவசரத்தில்
( இட்லி தோசை விலையைப் பாக்காம) “சரி. ஒரு பிளேட் இட்டிலி, ஒரு தோசை கொண்டுவாப்பா”.
இதுக்கா சார் இத்தினி நேரம் யோசிச்சீங்க?
ஒரு மாதிரி கடுப்பா மூஞ்சிய வெச்சுக்கிட்டு கையேந்தி பவனுக்குப் போக வேண்டியவன் எல்லாம் நம்ம ஓட்டலுக்கு வந்து நம்ம மானத்தை வாங்குறானே என்று நினைத்தபடி வெறுப்பாக, கொஞ்ச நேரத்துலே ஒரு பிளேட் இட்லியையும், இன்னொரு பிளேட்டில் சற்று நேரம் கழித்து தோசையும் கொண்டு வந்தான். .
நானும் அந்தப் பக்கம் இந்தப் பாக்காம இட்லி, தோசையை ஒரு வெட்டு வெட்டினேன். என்ன வெட்டறது? சாப்பிட்டு முடிச்சேன். இப்படியாகத்தானே அடியேனுடைய தீர்மானம் ஒரு பலத்த அடி வாங்கியது.
இட்லி, தோசை, காப்பியுடன் என் டிஃபன் இனிதே முடிந்தது. அந்த பில்லைப் பார்த்தே மயக்கம் வந்து விட்டது. என்ன ஒரு இட்டிலி 15 ரூபாயா? அது கூட பரவாயில்லை ஒரு மசால்தோசை 90 ரூபாயா? என்ன கொடுமை? இதுக்குமேலே GST. அதுக்கும் மேலே டிப்ஸ் இதை எல்லாம் கேக்கறதுக்கே ஆள் இல்லையா? என்று பொருமியவாறு இந்த மாதிரி ஹோட்டலுக் கெல்லாம் நான் வந்ததே தப்பு என்று என்னே நானேநொந்து கொண்டேன். ஆனாலும் அந்த ஓட்டல் ரொம்பி வழியுது. நம்ம ஊரிலே ஒரு பயலுக்கும் பைசாவோட மதிப்பு தெரியல்லேன்னு நொந்து என்ன பயன்?.
இதே தோசை ஆர்டர் பண்ணி அந்த டேபிள் ஆசாமி சாப்பிடும்போது, அந்த தோசை என்தோசையை விட நல்ல முருகலாகவும் கலராகவும் இருந்ததே. இதுலே கூட அதிர்ஷ்டம் வேண்டி இருக்கு.
அது சரி.. பேமெண்ட் கேஷாப் பண்ணலாமா இல்லே கார்டுலே பே பண்ணலாமா?
கார்டுலே பே பண்ணினா ஸ்கிம்மர் வச்சி நம்ம கார்டு டேடா எல்லாம் காபி பண்ணிட்டான்னா ? வேண்டாம். கேஷாவே கொடுத்துடுவோம்.
*****
'பேரர் பில் கொடுங்க.'
இதோ பில்லுக்குள்ளேயே பணம் வச்சிருக்கேன். எடுத்துக்குங்க.
****
சாவு கிராக்கி. ஒரு டிப்ஸ் கூட கொடுக்க யோக்கியதை இல்லை. இவன் எல்லாம் இங்கே சாப்பிட வந்துடறானுக என்று பேரர் முணுமுணுப்பது என் காதில் விழுந்தாலும் காதில் விழாத மாதிரி நான் நடித்தேன்.
ஆத்துலே தண்ணி கரைபுரண்டு ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி என்ன தான் ஆசைப்பட்டாலும் த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தும் இட்லி தோசை நம்மை விட்ட பாடில்லையே என்று எண்ணியபடி எழுந்து போய்க் கொண்டே இருந்தேன்.

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (5-May-20, 2:57 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 68

மேலே