கொரோனாவும் திருமணமும்

==============================
நிச்சயித்தக் கல்யாணம் நின்று போக
-நிதமிங்கு மணமக்கள் நெஞ்ச மேங்கும்.
நச்சரித்தத் தரகர்கை நமைச்ச லுற்று
-நற்சேதி யொன்றுகாய் நாளும் வாடும்
உச்சரிக்கக் காத்துலர்ந்த உதட்டுக் குள்ளே
-ஒதுமையர் மந்திரங்கள் ஓய்வெ டுக்கும்
எச்சரிக்கைத் தேவையென்று இந்த நாளில்
-இசைமுழங்கும் மேளதாளம் எட்டிப் போகும்
**
கட்டிவைத்த மண்டபத்தில் காக்கைக் குருவி
-களித்தின்பக் கதைபேசி காதல் கொள்ளும்
கெட்டிமேள சத்தமற்றுக் கிடப்ப தாலே
-கிளுகிளுப்பாய் எலிகூட்டம் கீதமி மிசைக்கும்
வெட்டிவிட ஆளின்றி வாசல் எங்கும்
-வேரூன்றிப் படர்ந்திருக்கும் விளைந்த புற்கள்
சட்டிப்பானை பாத்திரங்கள் சமையல் கட்டில்
-சமையலுக்குத் தவமிருந்த சான்று சொல்லும்.
**
பட்டுச்சேலை அணிந்துகொண்டு பவிசு காட்டும்
-பத்தினியர் கனவெங்கும் பட்டுப் போகும்
ஒட்டிப்போன முகங்களுக்கு உயர்ந்த தான
-ஒப்பனைகள் செய்வார்க்கும் உழைப்பு போகும்
ஒட்டியாணம் நகைநட்டு ஒய்யா ரங்கள்,
-உதட்டுச்சா யமெல்லாமே ஓய்வெ டுக்கும்
தொட்டுநம்மை வாட்டுகின்ற தொற்று நீங்கி
-தூயதாகும் காலமட்டும் தொல்லை யாகும்
**
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-May-20, 1:46 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 76

மேலே