எலி இழுத்துப் போகிறது

காஞ்சிபுரத்திலே, விநாயகப் பெருமானுக்கு உற்சவம் நடந்து கொண்டிருந்தது. பெருமான் பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து செல்கிறார். "பாவம் இப்படி இந்தப் பிள்ளையை எலி இழுத்துப் போகிறதே! சிவனுடைய மழு எங்கே? திருமாலின் சக்கரம் எங்கே? பிரமனின் தண்டம் எங்கே? இதனைத் தடுக்காமல்இருப்பதனால் அவர்களிடமிருந்து அவை யாவும் பறிபோய்விட்டனவோ?” என்று அங்கலாய்க்கிறார் கவிஞர்.

நேரிசை வெண்பா

மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பாப்பான் கதையும் பறிபோச்சோ - மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ
எலியிழுத்துப் போகின்ற தென். 110

- கவி காளமேகம்

பொருளுரை:

பெரிய பருமையான வலிமிகுந்த மும்மதமும் பொருந்திய யானை முகக் கடவுளை பேரெலியாகிய பெருச்சாளி இப்படித் தெருவூடே இழுத்துச் செல்லுகின்றதே, இது என்ன அநியாயம்?

ஆதி முதல்வனான சிவபிரானின் மழுவாயுதமும், முரன் என்பானைக் கொன்று முராரி எனப் புகழ்பெற்ற திருமாலின் சிறந்த சக்கரப்படையும், பிரமனின் கதாயுதமும் அந்த எலியை அடித்துப் பிள்ளையைக் காப்பதற்கு வழியில்லாமல் அவர்களிடமிருந்து பறி போய்விட்டதோ?

'யானையை எலி இழுத்துப் போகிற அதிசயத்தைப் பார்த்தீர்களோ’ என்று வியப்பதும் ஆம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-May-20, 7:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 63

மேலே