செருக்கிப் பெரியர் தமையுமே பேுணார் - புன்மை, தருமதீபிகை 617

நேரிசை வெண்பா

உரியநலம் ஒன்றும் உணரார்; செருக்கிப்
பெரியர் தமையுமே பேுணார்; - கரிய
மனப்புன்மை யோடு மருண்டு திரிவார்
இனப்புன் சிறியர் இழிந்து. 617

- புன்மை, தருமதீபிகை, கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை: புன்மையான சிறுமையாளர் நன்மை யாதும் உணரார்; நல்ல பெரியோரைப் பேணார்; உள்ளம் இருண்டு எள்ளல் இழிவுகளில் புரண்டு எவ்வழியும் மருண்டு இழிந்து திரிவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உணர்வு மனிதனுக்குக் தனி உரிமையாய் அமைந்திருக்கிறது. இனிய நீர்மைகளால் அது கூர்மை மிகுந்து சீர்மையோடு ஒளி பெறுகின்றது. நீர்மை குன்றியபொழுது உணர்வு கூர்மை மழுங்கிக் குருடுபடுகின்றது; படவே அறிய வேண்டியதை அறிய முடியாமல் அவலமடைகின்றது.

நல்ல தன்மைகள் இல்லையானால் அந்த மனிதனுடைய அறிவு பொல்லாத வழிகளில் புகுந்து அல்லல்களே புரிகின்றது. கொடியவன் தீயவன் சிறியவன் புல்லன் என வெளியே தெரிவன எல்லாம் உள்ளே இழிந்த குணக்கேடுகளின் விளைவுகளே யாம். மூலம் கெட முழுதும் கெடுகின்றது.

புன்மையுடையவர் புலைமக்களாய் இழிகின்றனர். நிலைமை தாழவே நீசங்கள் வளர்ந்து நாசங்களே செய்ய நேர்கின்றனர்.

பெரியர் தமையுமே பேணார் என்றது சிறுமையாளரது நிலைமை தெரிய வந்தது. நல்ல குண நீர்மைகளுடையவர் மேலோராய் மிளிர்கின்றனர். அங்ஙனமில்லாதவர் கீழோராய்த் தாழ்கின்றனர். அத்தாழ்வால் வாழ்வும் சூழ்வும் பாழாகின்றன.

மனப் புன்மையோடு மருண்டு திரிவார். இழிமக்களுடைய நிலைகளை இது விளக்கி நின்றது.

விதி நியமங்களின்றி மனம் போனபடியெல்லாம் இழிந்து திரியும் ஈன மக்களால் நாடு ஈனம் அடைய நேர்கின்றது. ஆகவே அவர் இருப்பு பூமிக்குப் பாரமாய்ப் பழிக்கப்பட்டது.

கட்டளைக் கலித்துறை

கடுஞ்சொல்லின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரைக்
கொடும்பவ மேசெயும் நிர்மூடர் தம்மைக் குவலயத்துள்
நெடும்பனை போல வளர்ந்துநல் லோர்தம் நெறியறியா
இடும்பரை ஏன்வகுத் தாய்?இறை வா!கச்சி ஏகம்பனே! 1

ஒயாமல் பொய்சொல்வர்; நல்லோரை நிந்திப்பர்; உற்று(ப்)பெற்ற
தாயாரை வைவர்; சதிஆயி ரம்செய்வர்; சாத்திரங்கள்
ஆயார் பிறர்க்குப காரஞ்செய் யார்;தமை யண்டினர்க்கொன்(று)
ஈயார் இருந்தென்ன போயென்ன காண்கச்சி ஏகம்பனே. 2

தீயவர்களுடைய செயல் இயல்களைக் குறித்துக் காட்டி அவர் இருப்பதால் உலகிற்கு நேரும் அவலங்களை விளக்கிப் பட்டினத்தார் இவ்வாறு பரிந்து பாடியிருக்கிறார். தீமை நீங்கித் திருந்தி உய்யவேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-20, 4:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே