நான் மகளாக வேண்டும்

நான் மகளாக வேண்டும்


எங்களுக்காக நீங்கள் ஏராளம் செய்தீர்கள்
எள்ளளவு கூட நாங்கள் செய்யவில்லையே!...
உங்களுக்காக


அம்மா இல்லாத பிள்ளைகள் என்று அரவணைத்து
ஆயிரம் தப்புகள் செய்திட்டபோதும் திருத்தி எங்களை
சீரமைத்தீர்கள்


கல்வி அறிவோடே கூட பொழுதுபோக்கு அம்சங்களும்
மேலும் பொது அறிவு வளர்ந்திட புத்தக படிப்பினையும்
தந்தீர்களே


இருபது வயதிற்கு மேலே எங்களுக்கு நேசமிகு
நண்பனாகி நல்ல பல அறிவுரைகளை நயமாக
போதித்தீர்களே


எல்லாம் எனக்கு பெண் பிள்ளைகள் என்று என்றுமே
புலம்பவில்லை நீங்கள் தைரியம் தந்தே எங்களை
வளர்த்தீர்கள்


பொல்லாப்பேர் வந்திடக்கூடாதென்றே போற்றி
போற்றி வளர்த்தும் எந்த நன்மையும் காணாமல் நீங்கள்
போய்விட்டீங்களே


பொல்லாத தந்தையர்க்கே போற்றிப்புகழ்ந்தும் சுமந்தும்
பார்ப்பதற்கும் ஆளாக்கிவிடவும் பலபேர் இங்கே
இருப்பார்கள்


பேணிப் பாதுகாத்த உங்களை நான்கு பிள்ளைகளில்
ஒருவர் கூட அருகிருந்து அரவணைத்து
பார்க்கவே இல்லையே


நினைக்கையில் தினம் தினம் புழுங்கிப்போகிறேன்
நிம்மதி இன்றியே உலர்ந்து போகிறேன் எல்லாமே
முடிந்து போயிற்று


அழகு பார்த்து ஆடை தந்த உங்களுக்கு எந்தன்
கையால் ஒரு ஆடை வாங்கித் தரும் கொடுப்பனவு
எனக்கில்லையே.....


லட்சியப் புருஷர் ஐயா நீங்கள் கண்டிப்பான பேர் வழிதான்
எத்தனை யுகங்கள் கடந்தாலும் எந்தன் ஐயாவுக்குத் தான்
நான் மகளாக வேண்டும்


வெள்ளை வேட்டி சட்டையும் சந்தனப்பொட்டும் நான்
கண்ணை மூடும் காலம் வரை என்னோடு நின்று என்னை
வழிநடத்த வேண்டும்.......

எழுதியவர் : Ranjeni K (7-Jun-20, 1:54 pm)
சேர்த்தது : Ranjeni K
பார்வை : 3086

மேலே