சக்கரங்கள்

வீட்டுக்கு வெளியே என் பெயரைச் சொல்லி கூப்பிடும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தேன். எங்கள் தெருவில் வசிக்கும் கனகம் அக்கா தான் நின்றிருந்தாள், வாங்க அக்கா... என்றேன். இப்படித்தான் அத்தி பூத்ததுபோல் தான் வந்து தலையைக் காட்டிவிட்டு போவாள். அன்றும் அப்படித்தான் வந்திருந்தாள், நானும் என்ன விஷயம் அக்கா? என்றேன்...ஒன்றுமில்லை, உங்களைப் பார்த்திட்டு போகலாம்முன்னு தான் வந்தேன் என்றாள். சரி உக்காருங்க, என்றேன். இல்லை உட்கார நேரமில்லை என்றவள்....என்னன்னா நான் இந்த தெருப் பக்கமா அடிக்கடிப் போவேன், போகும் போதெல்லாம் உங்க வீட்டுல தைக்குற சத்தம் கேட்கும். இப்போ கொஞ்ச நாளா தைக்குற சத்தமே கேட்கல.... ஒரு வேளை, உங்க உடம்புக்கு எதுமோ என்று பயந்துதான் பார்க்க வந்தேன் என்று அவளின் வழக்கமான குசும்புப் பேச்சை ஆரம்பித்தாள். நானோ, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...இப்போ எல்லாம் தைக்க வர்றது குறைவு, அதுதான் என்றேன். அவளோ! தன் கண்களில் சந்தோசம் பளிச்சிட, அதுதானே பார்த்தேன், தைக்க தெரியாம போனாலும் டொக்கு, டொக்கு என்று சும்மா மெஷினை போட்டு அடிச்சுக்கிட்டு இருப்பியே, என்னடான்னு பார்த்தேன் என்று ஏளனமாக சொல்லியவள், தொடர்ந்தாள்.... அப்போ, மெஷினை மூட்டையாக கட்டி பரணை மேல் போட்டுவிட்டியா? என்றாள். எனக்கோ தூக்கி வாரிப்போட்டது, ஒரு மனிதரை அவமானப்படுத்துவதற்கு ஒரு அளவே இல்லையா? என்ன ஒரு வக்கிரப்புத்தி.... ச்சே......என்று மனதிற்குள் நினைத்தபடி, அப்படியெல்லாம் ஒன்னுமில்லை என்றேன். சரி, அப்போ நான் வர்றேன்...என்றபடி நடக்க ஆரம்பித்தாள். கனகம் அன்று நடந்து கொண்ட விதம் ரணமாக வலித்தது. சந்தர்ப்பம், சூழ்நிலை சரியாக அமையும் வரை காத்திருப்போம் என்று, அமைதியாக இருந்து விட்டேன். நான் தைக்கின்ற போதெல்லாம் என் அருகிலே இருந்து என் மகள், நான் தைக்க வெட்டுகின்ற மீதி துணிகளில் அவளது பொம்மைக்கு அவள் ஏதாவது சின்ன சின்ன கவுன்கள் வெட்டி தைத்து அழகு பார்ப்பாள். இதை நான் அவளது சிறு வயது முதற்கொண்டே கவனித்தபடியால், அவளுக்கு தையலில் ஆர்வம் இருப்பதை தெரிந்து கொண்டேன். அதன் படி, அவளும் 10 வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டிலிருந்த சமயத்தில் அவளை தையல் பயிற்சி பள்ளிக்கு அனுப்பினேன். ஆறு மாத பயிற்சியை, இரண்டே மாதங்களில் முழுமையாக கற்றுக்கொண்டு திரும்பினாள். வந்ததும் எங்கள் வீட்டின் முகப்பில் இங்கே பெண்களுக்கான ஆடைகள் தைத்து தரப்படும் என்று விளம்பர பலகையை வைத்தேன். எங்கள் வீடும், ஒரு பிரதான வீதியில் அமைந்து இருந்ததால் எங்களின் முயற்சிக்கு அது ஒரு பெரிய பலமாக அமைந்தது. விளம்பரப் பலகையை வைத்த ஒரிரு நாட்களில், சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே வந்தார்கள். பின்பு ஒவ்வொருவரும் தைக்க வர வர, எங்கள் தையல் வேலையில் நல்ல முன்னேற்றம் வர ஆரம்பித்தது. எங்களின் முன்னேற்றத்தால், கனகம் அக்காவின் தையல் மெஷின் மூடி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பின்பு, ஒரு நாள் அவளின் உறவுக்காரப் பெண் வீட்டிற்கு தைக்க வந்தபோது சொன்னாள்.... எங்கள் அக்கா இப்போது தைப்பதில்லை, இருதயத்தில் ஏதோ பாதிப்பாம்!..டாக்டர் அவங்களை தைக்க கூடாதுன்னு சொல்லிட்டாராம் என்றாள். இதைக்கேட்ட நான் உண்மையிலேயே வேதனை பட்டேன்.. ஏனென்றால் அவங்க தான், எங்க ஊருக்குலேயே பெரிய தையல்காரி!....இந்த சம்பவத்தில் இருந்து நான் தெரிந்து கொண்டது இதுதான், இந்த உலகில் எது நிரந்தரம்?......எதுவுமே இல்லை. இது தெரியாமல் எல்லாமே தங்களுக்கு தான் சொந்தம் என்று, தம்பட்டம் அடிப்பவர்களை என்ன சொல்லலாம்?...என்றுமே வாழ்க்கை ஒரு சக்கரம், கீழும் மேலுமாக தான் போகும், இது மாற்ற முடியாத நியதி!.. சக்கரங்கள் நிற்பதில்லை என்பதை உணர்ந்து வாழ்ந்தோம் என்றால் எதையும் சமாநிலையாகவே பார்ப்போம்....

எழுதியவர் : K. Ranjeni (17-Jun-20, 4:54 pm)
சேர்த்தது : Ranjeni K
Tanglish : chakkarangal
பார்வை : 156

மேலே