22 அவளுடன் பேசும்போது

____=====_____=====___

(22.01.2019 நள்ளிரவு 12.45 க்கு அவள் வாட்ஸப் மூலம் அனுப்பியது.)

அன்புள்ள ஸ்பரி...

நானும் அம்மாவும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டோம். எங்களுக்கு உரிய குறிப்பேடுகளும் கொடுக்கப்பட்டு பயண வழி முறைகளும் தரப்பட்டு விட்டன.

பயணங்கள் குறித்து நீங்கள் சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது.

"எந்த பயணமும் ஒரு துல்லியம் இல்லாத சதுரமாக மட்டும் இருக்கும். அதில் நாம் பறிக்கப்படுகிறோமா அல்லது நம்மை சேகரிக்கிறோமா என்பதில் நாம் கவனம் கொள்ள வேண்டும்."

வனங்களுக்குள் நாம் சென்றால் ஒரு மரத்திடமாவது நமது ஸ்நேகத்தை பரிசளிக்க வேண்டும்.
இயற்கை படர்ந்த இடத்தில் கும்பலாய் கூட்டமாய் கத்தியபடி அலைவதன் பெயர் ரசிப்பது அல்ல... மனமும் உணர்வும் இணைந்து ரசிக்க ஓர் தொட்டியில் இருக்கும் ஒரு ரோஜா போதும்.

இயற்கை மௌனமானது.

அந்த மௌனத்தில் பெயரின்றி பதுங்கி இருக்கும் ஏகாந்தத்தின் மீது நம் மனம் பரவ வேண்டும். ஆகப் பெரிய மரம் நம் ஆயுளுக்கு முன்னும் பின்னும் வாழக்கூடியது. அது ரிஷியைப் போல் இருக்கும். அதன் மூச்சில் காலங்களின் வணக்கங்கள் கலந்திருக்கும். நம்மால் உணர முடிந்தவரை அதை தொடர்ந்து செல்ல வேண்டும். அதை அவதானிக்க வேண்டும்.

வனங்களில் வாழும் உயிரினங்கள் அது புழுவாயினும் அரசனைப்போல்தான் வாழ்ந்து கொண்டிருக்கும். நாம் பெருத்த குற்றஉணர்ச்சியுடன் அதன் முன் நிற்கும் நிலையில்தான் இன்னும் வாழ்கிறோம். மொழியில்லாத அந்த ஜீவன்கள் மனித கரிசனத்துக்கு பெயர் போனது. நாம்தான் கவனமாய் கடந்து செல்ல வேண்டும்.

நீர்நிலைகளில் மனிதப்பாதம் படாத ஒன்றினை நீ காண நேர்ந்தால் அதை உனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாகவே கொள்ள வேண்டும்.

நீர் தமக்குள் இணக்கமானவை. அவைகளில் குரலுக்கு அனுமதியில்லை. அதன் ஆழங்கள் வசியங்களின் கனவுகள்.
நமது பூட்டப்பட்ட கதவுகளை அது திறக்கும் வலிமை கொண்டது. அதன் விலை உயிர்... இவையெல்லாம் இதோ இப்போது நினைவுக்கு வருகிறது ஸ்பரி...

முடிந்த அளவு பிரதேசங்களில் உன்னை அந்நியப்படுத்திக்கொள். நீ யார் என்பதும் கூட உனக்கு முக்கியம் அல்ல. உன்னை சுற்றி மக்கள் திரள் இருக்கும். அவர்கள் வித்யாசமாக இருப்பதில் கற்பனை செலுத்தி உன்னை இழந்து விடாதே. அது உனக்கு சில குறிப்புகள் மட்டுமே.

மனிதம் என்பதை மட்டும் தேடு. அவசரமாய் கடந்து போகும் எதனிலும் அது தெரியாது.

ஒரு வேற்று மொழி சகோதரன் உன்னை கால்கள் இன்றி கடந்து போவான். ஒரு பிச்சைக்காரர் உன்னிடம் எந்த தயவும் எதிர்பார்ப்பும் இன்றி நீங்கிப்போவார். பசித்த குழந்தைகள் இரவை குடிசையில் எதிர்த்து கொண்டிருக்கும்.

நகரத்தின் பாழடைந்த வாழ்க்கை ஒன்று தன்னிரக்கமின்றி தன்னால் முடிந்தளவு மகிழ்ச்சிகரமாய் பூத்துக்குலுங்கும் காட்சிகளை நுட்பமாக குறித்துக்கொள்.

வாழ்க்கையில் நமக்காக யார் யாரோ நேரமின்றி உழைத்துக்கொண்டு இருப்பதை பயணங்கள் மட்டுமே வெளிப்படுத்தும். அவர்கள் தூக்கமின்றி பசியை மறந்து காமத்தை தொலைத்துவிட்டு காதலியை மறந்துவிட்டு உடலின் ஏதோ ஒரு பாகம் அயர்ந்து போகும்படி நோயுறும்படி அழுகும்படி பணியில் சிரித்துக்கொண்டே ஈடுபடுவார்.

அதுவும் அவர் குடும்பத்திற்காக மட்டுமே என்பதை பயணங்கள்தான் காட்டும். இவைகளில் மட்டுமே எந்த ஒரு கலையின் ஜீவனும் அடங்கி இருக்கிறது...

இவையெல்லாம் என் நினைவில் உள்ளது ஸ்பரி... உங்களுக்கு பேசுவதை விடவும் எழுதுவதுதானே பிடிக்கும். நான் எழுதி அனுப்புகிறேன்.

குழந்தைகள் நன்கு விளையாடிய பின் உணவு தாருங்கள்.

போய் வருகிறேன் ஸ்பரி...



🎏🎏🎏🎏🎏🎏

எழுதியவர் : ஸ்பரிசன் (15-Jul-20, 10:13 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 68

மேலே