வேணாம் வேணாம் வேணவே வேணாம் பாடகர் 8

சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன் அப்படின்னு அந்தக் கால சினிமாவுலே ஒரு பாட்டு உண்டு. சங்கீதம் பாடறதுலே இருக்கிற சங்கடம் அவருக்குத் தெரியல்லே. அது அவ்வளவு சுலபமில்லே. சங்கீதம் மட்டும் அதுலே ஆசை இல்லாதவங்களாலே கத்துக்கவே முடியாது. ஆசை இருந்தா மட்டும்போதாது. குரல் இருக்கணும் ஒரு பாடகராக. குரல் இருந்தா மட்டும் போதாது. வாய்ப்பு கிடைக்கணும். வாய்ப்பு கிடைத்தால் மட்டும் போதாது. அதிர்ஷ்டமும் இருக்கணும். பாடகர் ஆன பிறகு அதையே நம்பி வாழறது கஷ்டம்.
இப்போ பல பேர் தங்கள் குழந்தைங்களை இஞ்சினீயரோ, டாக்டரோ ஆக்கணும்னு ஆசைப்படறதைப் போல, சில பேர் தங்கள் குழந்தைங்களைப் பெரிய பாடகர் ஆக்கணும்னு ஆசைப் படறாங்க. அதைத்தான் இப்ப நாம அன்றாடம் டிவியிலே பார்க்கிறோமே. மழலை மாறாத நாலு வயசுக் குழந்தையிலே இருந்து பல குழந்தைங்களும் பாட்டுப் போட்டியிலே கலந்துக்கறதை. இந்தக் குழந்தைங்க தங்களுக்கு வயசுக்கு மீறிய காதல், காமரசப் பாட்டுக்களைப் பாடும்போது என் உடல் கூனிக்குறுகிப் போகிறது. சரி. அந்தக் கண்ணறாவியை விடுங்க. கர்நாடக சங்கீதத்தை விட சினிமா சங்கீதத்துக்குத்தான் இப்ப ஊர்லே மவுசு ஜாஸ்தி. இதனாலே இதுக்கு இப்போ டிமாண்ட ஜாஸ்தி.
சங்கீதம் ரொம்ப சுகமான சமாசாரம்தான். கேக்கறதுக்கு ஆனந்தமாத்தான் இருக்கும். சங்கீதத்துலேயே லயிச்சிட்டா, இந்த உலகத்துலே வேறு எதுவுமே வேணாம்னுதான் தோணும். ஆனா சங்கீதத்தையே முழு நேர பிழைப்பா வச்சிக்கிறதுங்கறது ரொம்ப சங்கடமான விஷயம். எல்லோராலேயும் அப்படி சங்கீதத்தையே முழு நேரத் தொழிலா செய்ய முடியாது. எவ்வளவோ நல்ல பாடலாம். நல்ல ஞானம் இருக்கலாம். இது மாத்திரம் முன்னுக்குவர போதவே போதாது. அத்தோட கூட நான் ஏற்கனவே சொன்ன மாதிரி 'அ' னா விலாசம் வேணும். பல பெரிய பாடகர்களோடே செர்டிஃபிகேட் வேணும். அவங்களோடே சிபாரிசு வேணும். சிபாரிசை வெச்சு மாத்திரம் சங்கீதத்துலே ஒருத்தர் முன்னுக்கு வர முடியாது. சொந்த சரக்கு வேணும். இவ்வளவுக்கும் பின்னாடி, உங்களுக்குக் கச்சேரி செய்ய ஒரு சபை வேணும். அதுக்கு சபாகாரியதரிசிக் கிட்டே நீங்க கெஞ்சிக் கூத்தாடி அவர் மனசைக் கரைக்கத் தெரியணும்.
பல தேங்காமூடிக் கச்சேரிகளை ஆரம்ப காலத்துலை செய்ய வேண்டி இருக்கும் .மனசைத் தளர விடக்கூடாது. ரசிகர்கள் அவ்வளவு எளிதா சேரமாட்டாங்க. அதுக்கு உங்களுக்குப் பப்ளிசிடி நிறைய வேணும். பப்ளிசிடிக்குப் பத்திரிகைகளோட ஆதரவு வேணும். உங்களுக்குத் திறமை இருந்தாக்கூட அதெல்லாம் அவ்வளவு சீக்கிரமா கிடைக்காது. ஒரு சிலரைத்தவிர பல பேருக்கு சங்கீத லைன்லே முன்னுக்கு வரதுங்கறது ஒரு பெரிய போராட்டம்தான். ரேடியோவிலே சான்ஸ் கிடைக்கிறது கூட கஷ்டம்.
ட்யூஷன் சொல்லித்தரலாம். அதுலே நிறைய சங்கடங்கள் இருக்கு. சில குழந்தைகளுக்கே சங்கீதம் கத்துக்கறதுலே இண்ட ரெஸ்டே இருக்காது. அம்மா அப்பா தொந்திரவு தாங்காமதான் அந்தக் குழந்தைங்க பாட்டுக் கத்துக்க வரும். "பக்கத்து வீட்டுலே என்ன சத்தம்னு ஒருத்தர் கேட்டார். "அங்கே ஒரு பொண்ணு இருக்கு. அவ பாட்டுக் கத்துக்கறா". அப்படின்னார் ஒருத்தர். ஆனா "அவபாட்டுக் கத்துக்கறமாதிரி தெரியல்லியே. அவபாட்டு கத்திக்கிட்டிருக்கிற மாதிரியில்லே இருக்கு"ன்னு கேட்டவர் சொன்னார். அந்தக் கதையாப் போயிடும் முக்கால் வாசி நேரம். அதுகளுக்கெல்லாம் பாட்டு சொல்லித் தரணும். அவங்க சரியாப் பாடலைன்னா, அவங்களோடே அம்மாக்களோடே பாட்டை நாம கேக்கத்தயாரா இருக்கணும். உங்க குழந்தைக்குப் பாட்டு வராதுன்னு மூஞ்சியிலே அடிச்ச மாதிரி சொன்னா, நீங்க பாட்டு வாத்தியாரா இருக்க லாயக்கில்லேன்னு நம்ம மூஞ்சியிலே அடிக்கிற மாதிரி திருப்பிச் சொல்லிடுவாங்க.
ஏதோ மாசம் 300, 400 வந்துக்கிட்டிருந்த சம்பளமும் போயிடும். இப்ப இருக்கிற விலை வாசியிலே ஒரு 30 அல்லது 40 குழந்தைகளுக்குச் சொல்லித் தந்தாத்தான் நாம பிழைப்பை நடத்தலாம். இதனாலே குழந்தைங்களுக்குப் பாட்டு வருதோ இல்லியோ அவங்களோடே படாத பாடு படத்தயாரா இருக்கணும்.
பிரபலமானாக்கூட அது ஒரு காலகட்டம் வரையிலும்தான் நிக்கும். நம்மை விட பாபுலராயிட்ட ஒருத்தர் வந்துட்டா நாம அம்பேல்தான். போதாததுக்கு இந்தக் குரலைக் கட்டிக் காப்பாத்தற வேலே இருக்கே அது பெரும்பாடு. நமக்குப்பிடிச்சதை சாப்பிட்டோம்னு கிடையாது. ஐஸ்கிரீம் மாதிரி சமாசாரங்களை எல்லாம் நினைச்சுப் பாக்கக்கூட முடியாது.
கல்யாணக் கச்சேரி செய்யும்போது தமக்கு எதிரிலேயே வெகு ஜன பேரலல் கச்சேரி, பேச்சுக் கச்சேரி நடக்கும். அவங்கவங்க பேசிக்கிட்டே இருப்பாங்க. உஷ், பேசாதீங்கன்னு சொல்ல முடியாது, பொறுத்துத்தான் போகணும்.
இந்த சங்கீத உலகத்திலே போட்டி , பொறாமை ரொம்ப ஜாஸ்தி. அதை எல்லாம் நீந்தி சமாளிக்கத் தெரியணும். நமக்குப் பிடிக்காத விமரிசகரா இருந்தாலும் பல்லைக் காட்டிக் கூழைக்கும்பிடு போட்டு அவரை இந்திரன், சந்திரன்னு புளுகணும். இல்லை. புகழணும்.. அந்த உலகமே தனி.
இப்ப ஒருசில பேர் சங்கீதத்துலே மதத்தைப் புகுத்தி அதையும் குழப்ப ஆரம்பிச்சிட்டாங்க. இந்த விஷயத்துலே ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு. இதனாலே இப்ப சில பிரபலங்களோட தலை உருண்டுண்டு இருக்கு.
என்னதான் செஞ்சாலும் வயசாகிறதைத் தடுக்க முடியாது.அப்ப நீங்க எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தாலும் உங்க குரல் மக்கர் செய்ய ஆரம்பிச்சுடும். அதனாலே எங்களோட சங்கீத வாழ்வு கொஞ்காலம் தான். அதுக்குள்ளே குழந்தைங்க படிப்பு, கல்யாணம், கார்த்திகை எல்லாத்தையும் செஞ்சி முடிக்கணும். அதை எல்லாம் நினைக்கும்போது ஏண்டா இந்த லைனுக்கு வந்தோம்னு ஆயிடும். அப்படி இருக்கும் போது எங்க குழந்தைங்களை சங்கீதத்தை மட்டும் நம்பி அந்தத்துறையிலே விட நாங்க என்ன பைத்தியமா? அதை ஹாபியா வெச்சுக்கணும். பொழப்பை நடத்து ஏதாவது ஒரு வேலையோ , தொழிலோ இருந்தாத்தான் தப்பிக்கலாம். ஆளை விடுங்க. நான் ஒருத்தன் படற பாடே போதும். என்குழந்தைங்களைப் படிக்க வெச்சி ஏதாவது ஒரு உத்தியோகத்துலே சேந்து மாசாமாசம் கை நிறைய சம்பாதிக்கணுங்கிறதுதான் என்னோட ஆசை. அவங்க முழு நேர பாடகரா ஆக வேண்டாம். வேண்டாம். வேண்டவே வேண்டாம்.

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (17-Jul-20, 2:49 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 69

மேலே