தேடல்

தேடல்
தேவையின் தொடர் நிகழ்வு
பசியை படிக்கும்போது புலர்ந்த பதம்

தேடல் ஒரு இயக்கம்
வறுமையில் விளையும் விருட்சம்
நம்பிக்கை ஊன்றுகோல் கொண்டு ஊர்வது
எல்லை வகுத்து எட்டி பிடிப்பது
நினைத்ததை கன்னமிட்டு கவர்வது
போராடி வெல்வது

நானோ சற்று மாறுபடுகிறேன் - ஆனால்
உண்மைக்கு புறம்பானவன் இல்லை
உண்மை பொய்மையின் எதிர்ப்பதம் இல்லை
என வாதாட வந்திருக்கிறேன்

தேடல் உங்களை பொறுத்தவரை
உள்ளிருந்து வெளியே பாய்வது
எனக்கோ
வெளியிலிருந்து உள்நோக்கி போவது
தேடலை நீங்கள் நெருப்பாக பார்க்கிறீர்கள்
நானோ ஒளியாகமட்டுமே பார்க்கிறேன்

தேடலில் நீங்கள் நிகழ்காலத்தை
தொலைத்துக்கொண்டே எதிர்காலத்தை எடுத்து
கடந்தகால புட்டிக்குள் போடுகிறீர்கள்

நானோ நிகழ்காலத்தையும் மறக்க முயல்கிறேன்
தேடல் உங்களுக்கு தேவையை பூர்த்தி செய்வது
தேவையற்ற எனக்கோ தேடல் ஒரு பாடல் மட்டுமே

உங்களுக்கு தேடல் என்பது
மலரிடம் தேன் தேடும் வண்டு எனக்கோ
வண்டை அழைக்கும் மலர்வாசம்
உங்களுக்கு தேடல் என்பது
கரையை தேடும் அலை எனக்கோ
அலையை மீண்டும் கடல் சேர்க்கும் கரை
உங்களுக்கோ
கனவில் நீங்கள் தேடும் காதலி
எனக்கோ கனவும் காதலியும் அற்ற உறக்கம்

உங்களுக்கோ
உணவில் தேடும் உப்பு
எனக்கோ உப்பில்லாத உணவையும் உண்டு ரசிக்கும் மனது

நீங்களோ
புரட்சியில் பட்ட புண்களுக்குள் புதிய சிந்தனையை தேடுகிறீர்கள்
நானோ அந்த புண்களுக்குள்ளே புலன் அடக்க முயல்கிறேன்
நீங்களோ
மிரட்சியில் மனம் விளையும்போது
புதிய கடவுளை தேடுகிறீர்கள்
நானோ
மிரட்சிக்குள் அமிழ்ந்து அந்த மீளா இன்பத்தை உணர்கிறேன்
ஆம் எனது தேடல் வெளிச்சத்திலிருந்து இருளை நோக்கி
இருள் பயமல்ல பார்க்கப்படாத புது உலகம்
சமூகம் புறக்கணித்த புனித தலம்
இருள் மனிதர்களற்ற மந்திராலயம்
வெளிச்சத்தில் நீங்கள் சமூகத்தை சுமக்கிறீர்கள்
இருளில் சமூகம் உங்களை சுமக்கிறது


சூரியன் தான் உங்கள் உலகம்
எனக்கோ நிலவும் விண்மீனும்
நீங்களோ பகலில் வெளியிலும்
இரவில் வீட்டிலும்
உங்கள் இருப்பை உங்கள் கதவுகளே தீர்மானிக்கிறது
நானோ கதவுகளற்ற வீட்டையே விரும்புகிறேன்
எனது இருப்பிற்கு உள் வெளி கிடையாது
இன்பத்தை நோக்கியல்ல எனது தேடல்
மாறாக துன்பத்தை துய்ப்பதற்கு

துன்பம் அதுதான் இன்பத்தின் வலிமை சொல்லும்
துன்பத்தை பார்க்காத எவனும் இன்பத்தில் குருடனாகிறான்
துன்பமே உங்கள் எல்கைகளை விரிவு படுத்தும்
துன்பமே உங்கள் ஏணியின் நீளத்தை அதிகரிக்கும்
துன்பம் உங்கள் உறவுகளின் உண்மை சொல்லும்
ஓரறிவு முதல் ஆறறிவுவரை தொடரும் வேட்கையே தேடல்

உங்கள் தேடலின் வெகுமதி செல்வம்
எனது தேடலின் விளைவு ஞானம்
கடல் மேல் எழுந்து கரை தேடும் அலையாக அல்ல
அலைகீழ் அசையாதிருக்கும் கடலாக இருக்க விரும்புகிறேன்
இரவு நீங்கள் கதவை மூடும் நேரம்
இயற்க்கை தன கதவை திறக்கும் நேரம்

நான் பைத்தியமாகவே இருந்துவிட்டு போகிறேன்
இவ்வுலகில் உண்மையின் பின்பக்கத்தை
பார்த்தவர்கள் அனைவருமே பைத்தியங்கள் தான்

எழுதியவர் : இளவல் (1-Aug-20, 10:37 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : thedal
பார்வை : 147

மேலே