மனம் போர்த்தும் புன்னகை

வேருடன் பிடுங்கி
வேற்றுஉலகில்
பிரிதொரு மண்ணில்
நட்டு வைத்தனர்
காதல் செடியினை

பூவே இல்லாமல்
பூத்தொடுக்கிறாள்
தன்னைப் புரட்டி போட்ட
புனித காலத்தை
புன்னகையாள் வரவேற்ற படி

பட்டுப்போன
மொட்டு போலக் கிடந்த
பட்டாம்பூச்சியென்று
அவள் புன்னகை பட்டதும்
பட்டுச்சேலை கட்டியது
தானும் சிறகடிப்பேனென்று

முட்கிரீடம் சுமந்து
பூமியில் பூத்த பூக்கள் எல்லாம்
புலம்பெயர்ந்தன
இவள் வீட்டு விருந்துக்கு

ஒதுக்கப்பட்டவர் உதிர்க்கும்
சிறு புன்னகையின்
சிதைவடைந்த உயிர்கூடுகளின்
தூதுவனாய்.

உதிர்ந்து உரமாகிய அவள்
தளிர்களின் சாபத்தால்
உரமெல்லாம் உயிர் தரித்து,
தழைத்துத் தலையாட்டும்
மலராய் தலைதழுவக்
காத்திருக்கின்றன

புன்னகை என்னும்
முகவரியைத் சுமந்தபடி..


வானம்பாடி (முஜா)

எழுதியவர் : (8-Aug-20, 1:52 pm)
பார்வை : 163

மேலே