வானும் கடலும்

பனிபடர்காலையின் பயின்று வரும் தென்றல்
புல்லின் நுனியிடை தழுவி
புது தெம்பினை தரட்டும்
கனிந்த பழத்தின் சுவைபோல்
இக்காலை இனித்து கடந்து போகும்
மொட்டவிழும் சத்தம்
பூவின் மூச்சுக்காற்று
புல்லினங்களின் சல்லாபம்
வண்டின் காதல் மொழி
வழிந்தோடும் நீரோடைச் சத்தம்
இவை பூமியின் சொர்க்கம்
இவைகள்
உங்கள் காதுகளுக்கெட்டாதும்
கண்களுக்கு புலப்படாதும்
போகுமாயின் அதை விட வேறென்ன பெரிய துக்கம்
வானும் கடலும்
மீளாத கூடலில் நீலத்தை கரைத்தது கடலுக்குள் வானம்
மேக உதடுகளால் கடலின் கரித்த எச்சிலை உறிஞ்சியது
ஆகாயக்குழந்தையை கிழக்கும் மேற்கும்
அலையவிட்டு தாளாத காதலை தணித்தது
துள்ளி திரியும் கயலின் கள்ள சிரிப்பை
வெட்கி தவிர்த்தது வானம்
மாலையிலும் மஞ்சள் பூசி மஞ்சம் அழைக்கும் மாயக்காரி
சூல் கொண்ட மேகத்தை மலை தழுவி
மழை தருகின்ற மந்திரம் கற்ற தந்திரக்காரி
வற்றாது இவள்காதல்
கடல் வற்றிப்போகுமோ?

எழுதியவர் : இளவல் (20-Aug-20, 12:04 pm)
சேர்த்தது : இளவல்
Tanglish : vaanum katalum
பார்வை : 169

மேலே