கானகமே கவனம் தேவை
கானகமே கவனம் தேவை
இலை தழுவும் காற்றை மேலும் கீழும் ஆடி தாலாட்டியது கிளைகள்
இரவின் இமைமூடலில் சிந்திய பனித்துளி
இலைமீது தவழ பகலவன் வந்து முகம் பார்த்து சரிசெய்தான்
நாணிய இலையால் நழுவிய பனித்துளி
புற்களின் நுனியில் பாரதியின் தலைப்பாகையாய்
முடியுமா என்று முறைக்கும் மான்களும்
வெறியுடன் வெறித்துபார்க்கும் சிங்கமும்
தத்தை பாடும் கிளியும் தாவித்திரியும் குரங்கும்
மெத்தை விரித்த புற்களும்
சின்ன சின்ன குருவிகளும்
மேகம் தவழும் மலைகளும்
தாகம் தீர்க்கும் நதிகளும்
சாபம் போக்கும் சக்திகளே
மனிதர்களற்ற மாநகரம்
அணில் சொன்னது அமைதி கொள்ளுங்கள்
கட்ட வண்டிக்காரனின் காலடிச்சத்தம் கேட்கிறது
உதிரும் சருகுகளே சத்தமின்றி பூமியை முத்தமிடுங்கள்
மொட்டுக்களே உங்கள் இதழ் விரிக்கும் சத்தம் நம் இனம் அழிக்கும் கவனம்
சல்லாபிக்கும் சிட்டுக்களே சற்று நிறுத்துங்கள் இல்லையேல் நீங்கள் இல்லாது போகலாம்
நதிகளே மீன்களை சற்று உறங்க சொல்லுங்கள்
புற்களே உங்கள் பற்களை வெளியில் காட்டாதீர்கள்
மலைகளே உங்கள் இருக்கத்தை அதிகமாக்குங்கள்
இல்லையேல் நீங்கள் மண்ணாவீர்கள்
மரமாகிய நானோ வேரோடு வெட்டப்பட்டு
விறகாகுவேன்
நாம் அமைதி கொள்வது மனிதர்கள் வாழத்தான்
நான் விறகானால் புல்லினங்கள் வீடற்றுப்போகும்
அதுவே தொடருமானால் ஒருநாள் மனிதர்கள் நாடற்று போவார்கள்
என் கிளை நுனியில் இருக்கும் ஆன்மாவை அவர்கள் அறிந்ததில்லை
ஏனென்றால் அவர்களுக்கு ஆறரிவு
குறைவான அறிவுள்ள நாம் ஒருபோதும்
குறை செய்யக்கூடாது
அமைதி கொள்ளுங்கள் மனிதம் வாழட்டும்