கர்மவீரர் காமராஜர்
தலைமுறைகள் தலைசிறந்து
வாழ்ந்திருக்க...
வம்சங்கள் வசந்தங்கள்
பெற்றிருக்க...
நாட்டில் நன்மைகள்
நிறைந்திருக்க...
நம்பிக்கை நட்சத்திரம் ஒன்று
மனித வடிவில் விருதுநகரில்
வந்து உதித்தது
ஆயிரத்து தொள்ளாயிரத்து
மூன்று ஜூலை பதினைந்தில்..
காமாட்சி என்றும் பின்
காமராஜர் என்றும்
பெயர் கொண்டது...
பதினோரு வயதில்
படிப்பை நிறுத்தியவர்
காமராஜர்... அவர் தம்
பதினெட்டு வயதில்...
பாரதியார் மறைந்த
பதினொன்றாம் நாள்
மதுரையில் மகாத்மா
காந்தியைக் கண்டு
பேசிய பின் காமராஜர்
பாரதியும் காந்தியும்
கலந்த கலவை ஆனார்...
பதவி இவரைத்
தேடி வந்தபோது கல்வியில்
பாரதியின் எண்ணங்கள்
செயல்வடிவம் கொண்டன..
முப்பத்திநாலு வயது
மூத்த காந்தியின் தரிசனம்
காமராஜரை முழுமையான
தலைவராக்கியது...
பள்ளிக்கூடங்களாய்
அவர் அன்று போட்ட
விதைகளால் இன்று சந்ததிகள்
தாண்டி விருட்சமாகி
நாட்டிற்கு உள்ளும்.. உலகில்
எட்டுத்திக்கும் தமிழர்கள்
சென்று செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு
சேர்க்கும் நிலை வந்தது...
பள்ளிகள் தோன்றின...
புத்தகங்கள் படித்தவன்
பயன் பெற்றான்...
புத்தகங்கள் விற்றவனும்
பயன் பெற்றான்...
இவரது திட்டத்தில்
மதிய உணவு சாப்பிட்டவன்
பயன் பெற்றான்..
உணவு சமைத்தவனும்
பயன் பெற்றான்...
காமராஜரின் பொற்கால
ஆட்சியில் அணைகள் உயர
நீராதாரம் உயர்ந்தது...
விவசாயம் உயர்ந்தது
விவசாயி உயர்ந்தான்...
தொழிற்சாலைகள் பெருகியதில்
தொழில் வளம் உயர்ந்தது..
தொழிலாளி உயர்ந்தான்...
மொத்தத்தில் நாடு உயர்ந்தது...
இன்று மடிக்கணினிகள்
நிறைய விற்பனையாவதற்கு
படிக்காத மேதை
காமராஜர் காரணம்...
இன்று பாரதப்
பிரதமர் சேர்த்து நாம்
பிறந்தது முதல்
இந்திய சுதந்திர தேதி
தெரிந்து வாழ்கிறோம்...
தன் நாற்பத்துநாலு வயதுவரை
சுதந்திர தேதி தெரியாமல்
விடுதலைக்குப் போராடி
சிறை சென்று சுதந்திரம்
பெற உழைத்ததினால்
இவரால் கல்வி சுகாதாரம்
உள்கட்டமைப்புகளுக்கு
தியாக உணர்வோடு
உழைக்க முடிந்ததோ...
ஜவஹர்லால் நேரு... அவர்
செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர்..
கல்வியில் சிறந்தவர்..
பாரதப் பிரதமர்... அவருக்கே
தலைவரானார் காமராஜர்...
இந்திய தேசியக் காங்கிரஸ்
பேரியக்கத் தலைவரானதால்...
தன்னிலும் பதினாலு வயது
குறைந்தவரை நேரு
தன் தலைவராய்
ஏற்றுக் கொண்டது
காமராஜர் திறமை
நிறைந்தவர் என்பதற்கு
அரிய சான்று...
'கிங் மேக்கர்' இவரால்
இந்திய துணைக்கண்டம்
இரண்டு பிரதமர்களைக் கண்டது...
உலக அரங்கில் இவர் பெயர்
நிலைத்து நின்றது...
இளைஞர்களுக்கு வழிவிட்டு
முதியவர்கள் வழிகாட்டும்
இவரது 'கே' திட்டம்
வரவேற்பைப் பெற்றது...
புத்திசாலித்தனம்...
சாதுரியம்... தலைமைப் பண்பு
முடிவெடுக்கும் திறன்
தொலைநோக்கு சிந்தனை
சிக்கல் தீர்க்கும் திறன்
தகவல் பரிமாறும் திறன்
விரைந்து செயலாற்றும் திறன்
இவைகளிலெல்லாம் சிறந்திருந்ததால்
சபைகளெல்லாம் இவரை
ஆராதித்தன...
ஆற்றோரங்கள்
கால்வாய் வாய்க்கால்
ஓரங்கள் எல்லாம்
ஆண்டு முழுமைக்கும்
பசுமை... அது இன்றும்
காமராஜர் பேர்சொல்லும்...
அணைக்கட்டுகள் பல
அவர் கட்டியதால்...
கர்ம வீரர் காமராஜரின் இறப்பு
அதுவும்கூட ஒரு
சம்பவமல்ல... சரித்திரம்...
மாநில காங்கிரஸ் தலைவராய்
இந்திய தேசிய காங்கிரஸ்
பேரியக்கத் தலைவராய்
பாராளுமன்ற உறுப்பினராய்
தமிழக முதல்வராய்க்
கோலோச்சிய பாரதரத்னா
கர்மவீரர் காமராஜர்
இறந்தபோது அவரிடம் இருந்தது
நூற்று அறுபத்தாறு ரூபாய்...
இவர்போல்
யார்தான் இருந்தார்...
யார்தான் இருப்பார்...
காந்தி பிறந்தநாளில்
மறைந்த மற்றொரு காந்தி
நம் காமராஜர்...
உலகில் முதன்முதலில்
பிறந்த மனிதனுக்கு
அவன் வாழ்க்கை மட்டும்
தெரிந்து இருக்கும்...
நாம் எல்லோருக்கும்
அவரவர் வாழ்க்கையோடு
எத்தனையோ பேர்
வாழ்க்கை வரலாறுகள்
வாய் மொழிகளில்
புத்தகங்களின் வழிகளில்
சமூக வலைத்தளங்களில்
தெரிந்து இருக்கும்...
எனை ஈர்த்த வரலாறுகள்
நிறைய உண்டு... அதில்
முதன்மையானது கர்மவீரர்
காமராஜருடையது...
அதைச் சொல்வது எனக்கு
மிகுந்த மகிழ்ச்சியானது ...
தமிழ் நாட்டின்
பேர் சொல்லும்
ஒரு பிள்ளையாய்
வாழ்ந்து மறைந்த
கர்மவீரர் காமராஜர்
தமிழர்களின் அடையாளம்
இந்தியர்களில் அவதாரம்...
பள்ளிகள் நிறைய திறந்ததால்
கற்கப்பட்டன பாடங்கள்...
அவரது வாழ்க்கையே
இன்று ஆனது பாடங்கள்...
பள்ளிப் படிப்பு முடிக்காத
பல்கலைக்கழகம் அவர்..
காமராஜர் புகழ்
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்
பிறகும் வாழ்ந்திருக்கும்...
வாழ்க கர்மவீரர்
காமராஜரின் புகழ்...
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
👍🌹🌷🌺🙏😀