முல்லைப்பூ சிரிப்பழகி

சீரிய வேல்விழி..
சிறுமின்னல் புன்னகை..
சிதறிடவைக்கும் கன்னக்குழி!

இவளின் குணத்திற்கு
இமயம் வரம்போ
மங்கையின் மனதிடம்
வஜ்ராயுதம் பலியோ
பயத்தில் இந்திரன்!

சுட்டிவயதில் சுற்றியவீதிகள்
பதின்பருவத்தில்
பழகிய தோழமைகள்
இன்றளவும் இணைபிரியா
இனியவரம் வாய்த்தவளே...

விட்டுக்கொடுத்தலும்
தட்டிக்கொடுத்தலுமான
உன் ஆகமவிதிகளில்
நட்புக்களை கட்டிவைத்து
கண்சிமிட்டுபவளே....

உரக்கசிரித்திட வைக்கும்
உள்ளமிகு நட்பாய்
உணர்விலும் உலாவரும்
உள்ளூர் சீமாட்டியே.....

மௌனம் கடந்து
மனம்விட்டு பேசிட
குணம் கொண்ட நட்பு
கூடவே இருப்பின்
ஜனித்திடும் நாட்கள்
ரசனையாய் என்ப
முத்தாய்ப்பாய் வந்தவளே
முழுமதியே குலமகளே....

மூவுலக தேவர்களும்
வரங்கள் வார்த்திட
வாழ்வாங்கு வாழ்ந்திட
உனை வாழ்த்தி நிற்கும்
எருமைமேக்கி என
நீ அழைக்கும்
ஏக வசனத்திற்கு
எங்கிருந்தோ
தலையாட்டும் உன்தோழி

எழுதியவர் : viji (29-Aug-20, 2:46 am)
சேர்த்தது : krishna viji
பார்வை : 175

மேலே