ஆசான்

ஆசான்!
தெய்வத்தின் இருக்கைக்கு முந்தியதாய் அவன் இருப்பு!
அழியாச் செல்வமாம் கல்விக்கு அதிபதியாய் அவன் பொறுப்பு!

வான விற்களின் வரிசை மாறா புது அணிவகுப்பு!
என வண்ணத்தை மடி சுமந்த வண்ணத்துப் பூச்சிகளுக்கு அவன் வகுப்பு!

அவன் சொல் உளி பட்டுக் கல் உறைந்த சிலை எழும்பும்!
அவன் உள் ஒளி தொட்டுக் கருகிட்ட மாணவப் பயிர் சிலும்பும்!

களி மண் குழைத்து இழைத்திடுவான் பல் உருவதனில்!
நல் வழி உரைத்து மனப் பதர் களைவான் தன் பரிவதனில்!

நம்பிக்கை நாற்றதனை போகமாய் விளைத்திடுவான் தன் கடமை என்று!
அறுவடையை எண்ணிக் காத்திரான் அது மடமை என்று!

அறியாமைக் களை நீக்க வார்த்தைகளில் தெளித்திடுவான் களைக் கொல்லி!
அவன் உரை அன்றோ மாணவச் சமூகத்தின் ஆயுள் கூட்டும் அறுநெல்லி!

தாயறியாப் பிள்ளைகளின் ஏக்கத்திற்கு அவன் அன்பால் ஆகிடுவான் மருந்து!
தந்தையில்லாப் பிள்ளைகளின் உயர்வுக்கோ அறிவாலே சமைத்திடுவான்
நல் விருந்து!

கறுப்பினமாய் இருப்பதனால் கர்வம் கொண்டு
அவன் கைபட்ட கரும்பலகை சிலிர்ப்பதுண்டு!

கடையனையும் கடைத்தேற்றி கரைசேர்க்கும் கட்டுமரமாய் இங்கு கல்வி அன்றோ?
கள்ளிப் பால் குடித்து காலனடி வீழ்ந்த பெண் இனத்தை கல்விப் பால்
குடிக்கச் செய்தவனும் ஆசான் அன்றோ?

பட்டி தொட்டி எல்லாம் விதைக்கின்றான் கல்விப் பயிரை!
சாதியின் வேரறுத்து எழுப்புகின்றான் வகுப்பறையில் சமத்துவத்தின் உயிரை!

திக்கறியாத் திரைகடல்ப் பயணமாய் இங்கு கல்வி
அது வகுப்பறையில் மாணவன் நலம் வேண்டி ஆசான் செய்யும் பூமிதி வேள்வி!

ஆசானைப் போற்றிட்டுச் சுழல்தலினால் புவி இங்கு நீடு வாழும!
அவன் விழிநீரில் கழன்றே அதன் அச்சாணி வீழும்!

சு.உமாதெவி

எழுதியவர் : சு. உமாதேவி (5-Sep-20, 4:40 pm)
Tanglish : aasaan
பார்வை : 71

மேலே