கண்ணில் நாம்காணும் காட்சியில் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
கண்ணில் நாம்காணும் காட்சியில் ஈர்த்திட
பண்ணில் பாலிக்கும் பாட்டில் பளிச்சிட
மண்ணின் பாட்டினை மாண்புடன் காத்திட
உண்மை ஓங்க உழைத்தால் ஒளிருமே! 1
இனிக்கும் சொற்களில் ஏற்றம் பெருகிட
அனிச்சப் பூவாய் அவளும் குழைந்திட
கனியின் தித்திப்பாய்க் காதலும் ஓங்கியே
அனந்தம் ஆனந்தம் ஆக்கிடும் கோடியே! 2
பெற்ற வாழ்வைப் பிழையின்றி வாழ்ந்திடல்
உற்ற நம்வாழ்வில் உய்தியை நல்கிடும்;
சுற்றும் பேதையர் சொற்கேட்பின் நீயுணர்
முற்றும் உன்வாழ்வில் மூளு மிடரென்றே! 3 - வ.க.கன்னியப்பன்