இறைவன் என்பவன் யார்
(கதையில் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களும் இடங்களும் கற்பனையே)
வீராடிகபுரத்தை பார்கவன் என்கின்ற மன்னன் திறம்பட ஆட்சி செய்து வந்தான். உலகம் முழுதும் ஆராதிக்க படுகின்ற, கடவுள் என்ற சக்தியின் மேல் சற்றும் ஈடுபாடு அற்று இருந்தான் அவன். தனது ஆளுமையை பிற தேசங்களுக்கும் பரப்பிட நினைத்த அவன், தன் படை பலத்தை கொண்டு பல நாட்டு அரசர்களை வெற்றி கண்டு அவர்தம் நாடுகளை முற்றுகை இட தொடங்கினான்.
அவன் தொடுத்திருந்த போர்கள் சற்றே ஓய்வு பெற்றிருந்த சமயம், தன்னால் முற்றுகையிடப்பட்ட ஒரு நாட்டின் வீதி வழியே வீரர்கள் சூழ தேரில் பவனி சென்று கொண்டிருந்தான். அவன் வருவதை அறியாத, பார்வையும் கேட்கும் திறனும் குறைந்த முதியவர் ஒருவர் அவர் மனைவியிடத்தில் “பார்கவன் எனும் மன்னர் நாம் நாட்டை முற்றுகை இட்டதை அறிவாயோ?” என கேட்டு கொண்டிருந்தார்.
தன் பெயரை எவரோ கூற கேட்ட மன்னர், வீரர்களை சிறிது நேரம் அமைதியாய் இருக்கும்படி கூறிவிட்டு அந்த முதியவரின் பேச்சில் தன் கவனத்தை செலுத்தினான். தனது பேச்சை தொடர்ந்த முதியவர் “பிற நாட்டை முற்றுகையிட துடிக்கும் அம்மன்னர் எத்தனை கொடூர குணம் படைத்தவராக இருக்க வேண்டும். இவர் போன்ற அரக்கர்களை அழிக்க இறைவன் நிச்சயம் வருவார்” என சொல்லி முடித்தார்.
அவர் சொன்னதை கேட்ட பார்க்கவ மன்னனின் மனதில் சட்டென்று கோவம் எழுந்த போதும், அதை தாண்டி பிறிதொரு உணர்வு மேலோங்குவதை உணர்ந்தான். அவ்விடம் விட்டு நகர்ந்து தனது அரண்மனை சென்று சேர்ந்தான். அன்றிரவு அவனால் உறங்க முடியவில்லை. தன்னை அரக்கனென்று சொன்ன அந்த முதியவர், இறைவன் வருவான் என்றாரே. அப்படியெனில் இறைவன் என்பவர் யார்? என்ற கேள்வி அவனுள் எழுந்தது. உறக்கமற்ற அந்த இரவை கடினப்பட்டு கழித்தான் அவன்.
பொழுது புலர்ந்ததும் தனது அமைச்சர்களை அழைத்து வர சொன்னான். சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த சேர்ந்த அவர்களை கண்டு “இறைவன் என்பவன் யார்?” என்ற கேள்வியை கேட்டான் அவன். அமைச்சர்கள் அனைவரும் ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்த வண்ணம் இருந்தனர். “அழித்தல் தொழிலை தனதாக்கி கொண்ட சிவன் தான் இறைவன்” என்றார் சைவ சமயத்தை சார்ந்த அமைச்சர் ஒருவர். “காத்தல் தொழிலை செய்யும் என் விஷ்ணுவே இறைவன்” என்றார் வைஷ்ணவ சமயத்தின் பால் ஈர்ப்பு கொண்ட மற்றொரு அமைச்சர்.
இப்படி அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வணங்கும் உருவங்களை இறைவன் என்று சொல்ல மன்னனோ பெரும் குழப்பத்திற்குள்ளானான். அவனது மனம் எவரின் விளக்கத்தையும் ஏற்கவில்லை. அனைவரையும் கலைந்து செல்ல சொன்னவன் தனது அறையை நோக்கி நடந்தான். அப்போது அங்கிருந்த காவலாளி ஒருவன் வனத்தின் நடுவே கடும் தவம் புரிந்து கொண்டிருக்கும் முனிவரை பற்றி சொல்ல, தான் ஐய்யத்தை போக்கிட அவரால் முடியும் என்று எண்ணிய மன்னன் அவரை சந்திக்கும் ஏற்பாடுகளை செய்திட சொன்னான்.
அன்று காலையே மன்னர் தன் காவலர்கள் சூழ வனத்தை நோக்கி பயணிக்க துவங்கினான். வனத்தின் மைய்ய பகுதியை அவர்கள் அடைந்த போது அங்கே மரமொன்றின் அடியில் தவத்தில் இருந்த முனிவரை கண்டான் மன்னன். தன் காவலாளிகளை சற்று தொலைவிலேயே நிற்க சொல்லி விட்டு அவரை நோக்கி நடந்தான். மன்னர் தன்னை நெருங்குவதை தம் ஞானத்தால் உணர்ந்த முனிவர் தமது கண்களை திறந்து மன்னரை நோக்கினார்.
“முனிவரே! இந்த நாட்டை ஆளும் எனக்கு மனதில் நிம்மதி இல்லை. என் மனதில் எழுந்த கேள்விக்கு தங்களிடம் பதிலை எதிர் பார்த்து வந்திருக்கிறேன்” என்றார். அவர் சொன்னதை கேட்டு புன்னகைத்த முனிவர் கேள்வியை கேள் என்பது போல் செய்கை காட்ட மன்னரும் இறைவன் என்பவன் யார் என்ற தனது கேள்வியை கேட்டான்.
சில மணித்துளிகள் தமது கண்களை மூடிய முனிவர், பின் மன்னரிடம் “மன்னா! உனது கேள்விக்கு யாம் பதில் உரைக்க வேண்டுமெனில் நீ உன்னிடம் இப்போது இருப்பதில் உன் தேவை போக மற்றவை அனைத்தையும் பிறரிடம் கொடுத்து விட்டு வர வேண்டும். நினைவில் கொள். நீ கொடுக்கும் பொருள்களை பெறுகின்றவனுக்கு அதற்கான தேவை இருக்க வேண்டும்” என்றார்.
முனிவர் சொன்னதை கேட்டதும் சற்றே அதிர்ந்த மன்னர் தமது கேள்விக்கு விடை அறியும் பொருட்டு அவர் சொன்னதை செய்வதென முடிவு செய்தான். முனிவரிடம் விடை பெற்றவன் தனது வீரர்களை அரண்மனைக்கு திருப்பி செல்லும்படி கூறிவிட்டு அவனது தேரோட்டியை கண்டு தனது தேரை கடத்தி செல்ல சொன்னான். அவனிடம் அப்போதைக்கு இருந்தவைகள் என்னென்ன என்பதை மனதுள் எண்ணி பார்த்து கொண்டான்.
சிறிது தூரம் அவன் பயணித்த பின் ஓரிடத்தில் ஒரு சிறிய பாலகன் அழுது கொண்டிருப்பதை கண்டான். தேரை நிறுத்திவிட்டு அவனின் அருகில் சென்ற மன்னன் அவன் அழுவதற்கான காரணத்தை வினவினான். தன்னிடம் அக்கேள்வியை கேட்பவன் மன்னன் என்பதை அறியாத சிறுவன் “என் தந்தைக்கு உடல் நலமில்லை. அதனால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. அதன் காரணத்தால் என் வீட்டில் உள்ளவர் எவரும் 2 நாட்களாய் உணவேதும் உண்ணவில்லை” என்றான்.
அதை கேட்டதும் கவலை கொண்ட மன்னன் தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி அந்த சிறுவனிடத்தில் கொடுத்து “பாலகனே! இதை பெற்று கொள். உன் குடும்பத்திற்கு இது உதவியாய் இருக்கும்” என்றார். அவர் கொடுத்ததை பெற்று கொண்ட அச்சிறுவன் அழுவதை நிறுத்திவிட்டு மன்னரை நோக்கி “தாங்கள் இறைவனை போன்றவர்!” என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
தன்னை இறைவன் என்று சொன்ன அந்த சிறுவனின் வார்த்தைகள் மன்னருக்கு வியப்பை அளித்தது. சற்றே மனது தெளிந்தவனாய் தனது தேரை தொடர்ந்து கடத்திட சொன்னான். சற்று தொலைவில் ஒரு முதியவர் தட்டு தடுமாறி நடப்பதை கண்ட மன்னன் மீண்டும் தனது தேரை நிறுத்திவிட்டு அவர் அருகில் சென்றான். “முதியவரே! தாங்கள் ஏன் இப்படி தனியாக கடினப்பட்டு நடக்கிறீர்கள். தங்களிடம் வாகனமோ உடன் வர துணையோ இல்லையா?” என வினவினான்.
“என் குதிரை நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டது. வேறு குதிரை வாங்கிட என்னிடம் பொருள் இல்லை. என் மனைவிக்கு பார்வை இல்லாத காரணத்தால் நான் தனியாக வந்தேன்” என்று தன் நிலையை சொன்னார் அந்த முதியவர். ஒரு கணம் சிந்தித்த மன்னன் தனக்கு நடக்கும் வல்லமை இருக்கிறது தேரின் அவசியம் இருப்பது இந்த முதியவர்கே என்பதை உணர்ந்தான். தேரோட்டியிடம் அம்முதியவரை அவரது வீட்டிற்கு அழைத்து செல்லும் படி சொன்னான்.
இதை கேட்ட முதியவர் மன்னரை நோக்கி தன் கரம் கூப்பி “என் நிலையை உணர்ந்து உதவிய தாங்கள் கடவுளாக தெரிகின்றீர்” என்றார். மன்னரின் மனது முற்றிலும் தெளிவானது. முனிவர் இருந்த திசை நோக்கி நடக்க துவங்கினார். இறுதியாய் அவர் முனிவரின் இடத்தை அடைந்த போது அவர் முகத்தில் இருந்த தெளிவை கண்ட முனிவர் “மன்னா! உமது கேள்விக்கு பதில் கூறட்டுமா?” என்று கேட்க, மன்னர் தெளிவான குரலில் உரைத்த வார்த்தைகள்.
“முனிவரே! எம் கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டோம். தன் தேவைக்கு அதீதமானதை மற்றவரிடம் கொடுத்து வாழும் ஒவ்வொரு மனிதனும் இறைவனே!”
----------- இறைவனாய் வாழ்வதும் அரக்கனாய் வாழ்வதும் நம்மில் தான் இருக்கிறது. --------