தன்னம்பிக்கை - துகிருஷ்ணமூர்த்தி
பரந்து விரிந்த வானை பாரீர்;
பலகோடி பறவைகள் பறப்பதை.
திரிந்து அலைந்து இரை தேடி,
ஒருகோடி முதல் வானின் மறு கோடி வரை.
மரிப்பதில்லை, மாலையில் மறையும் கதிர்;
இரவைக்கண்டு இறப்பதுவுமில்லை;
மீண்டெழுந்து பொசுக்கும் வெறியால்
மறுநாள் காலை சுட்டெரிக்கும் ஒளியால்.
நிற்பதில்லை, மூலையில் அசையும் காற்று;
நெடி துயர்ந்த மரம் மலை பாராது
விரிந்தகன்ற வான் வெளி காணாது
சிலிர்த்தெழுந்தே சீறும் பெரும்புயலாய்.
பரந்து விரிந்த வானை பாரீர்;
பலகோடி பறவைகள் பறப்பதை.
திரிந்து அலைந்து இரை தேடி
ஒருகோடி முதல் வானின் மறு கோடி வரை.
தகிப்பதில்லை, காலையில் ஒளியும் நிலவு;
பகலைக்கண்டு மிரள்வதுவுமில்லை;
சகித்துக்கொண்டே பொறுத்திருந்து
குளிர்த்தகிக்கும் பின்னிரவின் மென்மையில்.
வெறுப்பதில்லை, காற்றின் வேகவீச்சால்;
வலையறுந்தும் வருந்துவதுமில்லை;
பொறுத்துகொண்டே மீண்டும் மீண்டும்
பின்னியெழுப்பும் சிலந்திவலை.
பரந்து விரிந்த வானை பாரீர்;
பலகோடி பறவைகள் பறப்பதை.
திரிந்து அலைந்து இரை தேடி
ஒருகோடி முதல் வானின் மறு கோடி வரை.
இழக்கவில்லை, ஆராய்ச்சி தோல்வியால்
மனத்திட்பம் இம்மியும் குறையவில்லை; களைப்பின்றி முயன்று முயன்றே
கண்டுபிடிப்பால் உலகை வென்றார் எடிசன்.
வசப்படும் வானம் வெகு தொலைவில் இல்லை;
வெல்வோம் எனும் வேட்கை கொண்டாயின்
வசைபாடும் கொள்கைகளும் பொசுங்கிடும்;
மீள்வோம் என்றே மானிடம் மீண்டுணைந்தால் .
பரந்து விரிந்த வானை பாரீர்;
பலகோடி பறவைகள் பறப்பதை.
திரிந்து அலைந்து இரை தேடி
ஒருகோடி முதல் வானின் மறு கோடி வரை.
குன்றாத தன்னம்பிக்கை என்றாவது வெல்லும்;
வென்றானவர் இன்று, தோற்றதுவும் உண்டு.
நன்றாக வாழ்ந்திடவே நல்வழிகள் கண்டு
நல்வாழ்வை ரசித்து நம்பிக்கையை விதைப்பீர்.