மரங்களை வெட்டாதீர்

கவிதை
மரங்களை வெட்டாதீர்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

பிறந்த அழும் குழந்தை
அழகிய மரத்தொட்டிலில்
அமைதியாக தூங்குகிறது
மரங்களை வெட்டாதீர்!

காட்டில் மரக்கிளையில்
கட்டிய சேலைத் தூளியில்
களையெடுக்கும் பெண்ணின்
குழந்தை தூங்குகிறது
மரங்களை வெட்டாதீர்!

மரத்தாலான நடைவண்டி
வளர்ந்த குழந்தை
தளிர்நடை பயில்கிறது
மரங்களை வெட்டாதீர்!

ஆடிப்பாடி ஓடித் திரியும்
சிறுவர் சிறுமிகள்
அழகிய மர ஊஞ்சலில்
ஆடி மகிழ்கிறார்கள்
மரங்களை வெட்டாதீர்!

நடை தளர்ந்த முதியவர்
நடக்க முடியாமல்
மர ஊன்றுகோல் துணையோடு
தெருவில் நடந்து வருகிறார்
மரங்களை வெட்டாதீர்!

கொளுத்தும் உச்சி வெயில்
ஆலமர நிழலில்
செருப்பில்லா பிச்சைக்காரன்
ஒதுங்கி நிற்கிறான்
மரங்களை வெட்டாதீர்!

காய்ந்த மரங்கள்கூட
குடிசை வீட்டு அடுப்பில்
விறகாக எரிகிறது
மரங்களை வெட்டாதீர்!

பசிக்கு பழங்களாக
பறவைக்கு கூடு கட்ட
நோய்க்கு மருந்தாக
தாய்போல் உதவும்
மரங்களை வெட்டாதீர்!

ஆசிரிய பெருமக்களே
படிக்காத மாணவனை
‘மரம்போல் நிற்காதே’
ஏசுவதை நிறுத்துங்கள்
மரங்களை வெட்டாதீர்!

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (9-Nov-20, 6:53 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 171

மேலே