நான் யார் நான் எது
நிலைக்கண்ணாடி முன்நின்று நித்தம் நித்தம்
நிலையா எனது உடலழகையே பார்த்து
மகிழ்ந்திருந்த நான்இன்று ஏனோ எனையே
அறியாது, நான் யார் நான் எது
என்று என்னையே வினவி பதில்
கண்ணாடி சொல்லுமா என்று பார்த்தேன்
என்ன ஆச்சரியம்..... நிலைக்கண்ணாடி எந்தன்
கேள்விக்கு பதில் சொன்னதுபோல்..... அதில்
நான் என்னுருவதைக் காணாது அங்கு
ஓர் சுழலும் சக்கரமாய் ஓர் ஜோதிகண்டேன்
அதன் நடுவில்.... நடுவில் வசீகரமாய்
சிரிக்கும் கருமாணிக்கமாய் கண்ணன் உருக்கண்டேன்
மஞ்சள் உடை உடுத்தி, தோள்வரை
தவழும் கார்வண்ண குழலும் கையில்
வேங்குழலும் பவள வாயுமாய் எனக்கு
காட்சி தந்தான் மாமாயன் மாதவன்
புரிந்துகொண்டேன் இதனை நாள் என்னை
நான் என்னுடல்தான் என்று எண்ணியதெல்லாம் பொய்
நான் உடல் அல்லன் உருவில்லா ஜீவன்
என்னுள் இருந்து என்னை இயக்குபவன்
அவனே அவன்தான் கண்ணன் என்று
என் ஆணவம் எல்லாம் ஒழிய
நான்யார் நான் எது புரிந்தது
இனி எனக்கெதற்கு நிலைக்கு கண்ணாடி !