பொருந்தற்க பல்லோர் வெறுத்துப் பழிக்கப் படும் பொல்லாப் பழி - பழி, தருமதீபிகை 712

நேரிசை வெண்பா

பல்லோர் வெறுத்துப் பழிக்கப் படுவதே
பொல்லாப் பழியாம் பொருந்தற்க; - எல்லாரும்
போற்றி மகிழும் புகழ்வினையை எஞ்ஞான்றும்
ஆற்றி வருக அமர்ந்து. 712

- பழி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பலரும் வெறுத்து இகழ்ந்து பேசுவது பழி என வந்தது; அந்த இழிநிலையை மருவாமல் புகழுக்கு உரிய உயர்வினைகளைச் செய்து வருக; அவ்வாறு வரின் இசையும் இன்பமும் பெருகி வரும்; இவ்வுண்மையை உணர்ந்து உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதன் மனச்சான்று உடையவன். அந்த மன உணர்ச்சி புனித நிலைகளில் பழகி இனிது வளர்ந்து வரின் அந்த மனிதன் தெய்வத் தேசை அடைந்து கொள்கிறான். மனமே சாட்சியாக எவன் நடந்து வருகிறானோ அவன் அரிய ஒரு நீதிமானாய் நிலவுகிறான், பெரிய மகிமைகள் எல்லாம் அவனிடம் உரிமையாக வந்து அடைகின்றன. இந்த நியதியை இழந்தபோது மனிதன் இழிந்து படுகிறான். இழிநிலை தெரியாமல் அழிதுயருறுகிறான்.

அரச தண்டனைக்கு அஞ்சியும், தெய்வ தண்டனைக்குப் பயந்தும், ஏதாவது ஓர் ஊதியம் கருதி நசை மிகுந்தும் நடந்து வரும் நடைகள் எல்லாம் கடையர்களுடையன என்று இழிக்கப்பட்டுள்ளன. கீழ்மை நீங்க மேன்மை ஓங்குகிறது.

‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ எனக் கீழ்மக்களுடைய நிலைமைகளை வள்ளுவர் இப்படிக் குறித்துக் காட்டியுள்ளார். அடி, உதை, சிறை முதலிய கொடிய தண்டனைகளுக்கு அஞ்சி ஒழுங்காய் நடந்து வருவது இழிந்த மக்களின் நிலை என்றதனால் உயர்ந்த மக்கள் தம் உள்ளமே சான்றாய் ஒழுகி வருவார் என்பது உணர வந்தது. மனச்சான்றே அரிய சான்றாண்மையாம்.

இத்தகைய உயர்நிலையில் நில்லாது போயினும் இழி நிலையிலும் கூட இல்லாமல் இழிந்து போவது பழி நிலையாய் நின்றது.

உயர்ந்தோர் உள்ளமே சான்றாய் ஒழுகி உயர்கின்றார்.
இழிந்தோர் அச்சமே ஆசாரமாய் அலமந்து திரிகின்றார்.

இந்த இருவகையிலும் சேராமல் ஈனமாய் இழிந்து உழலுபவர் பழியாளராய்ப் பாழ்பட்டு நிற்கின்றார். நல்ல அறிவுடைய மனிதப் பிறவியை அடைந்தும் மேலும் உயராமல் கீழே போவது பாழான படுதுயரமாயுள்ளது. கீழ்மை தாழ்மையே தருகிறது.

‘பல்லோர் வெறுத்துப் பழிக்கப்படுவது பழி’ என்றது பழி என்னும் மொழிக்குப் பொருளை விளக்கியது.

பிழையான வழிகளில் இழிந்து செல்பவரையே உலகர் இகழ்ந்து பேசுகின்றார். பொது மக்களுடைய வெறுப்புக்கும் இகழ்ச்சிக்கும் ஆளாகாமல் வாழ்பவனே ஆனவரையும் நல்ல ஆளாய் மேன்மையடைந்து நலம் பல பெறுகின்றான்.

நேரிசை வெண்பா

தான்பிறந்த இல்நினைந்து தன்னைக் கடைப்பிடித்துத்
தான்பிற ராற்கருதற் பாடுணர்ந்து - தான்பிறராற்
சாவ வெனவாழான் சான்றோராற் பல்யாண்டும்
வாழ்க வெனவாழ்தல் நன்று. 67 சிறுபஞ்ச மூலம்

ஒருவன் சிறந்தவனாய் வாழ வேண்டிய வகையை இது வரைந்து காட்டியுள்ளது.

தான் பிறந்த குடியை நினைந்து, இழிந்த செயல்களை ஒழிந்து, தனக்கு எவ்வழியும் யாதும் இளிவு நேராதபடி பாதுகாத்து ஒழுகி வருபவனே உயர்ந்த ஆண்மகனாய் ஒளி பெறுகின்றான்.

’இவன் செத்து ஒழிய மாட்டானா?’ என்று பிறர் வெறுத்து வையும்படி ஒருவன் உயிர் வாழலாகாது; இவன் நீண்ட ஆயுளோடு பல்லாண்டு வாழ வேண்டும் என்று சான்றோர் உவந்து வேண்டும்படி ஒருவன் இனியனாய் வாழ வேண்டும்; மனித வாழ்வில் அதுவே புனிதமான பெரிய மகிமை வாழ்வாம்.

தீய காரியங்களைத் துணிந்து செய்பவனையே பலரும் இகழ்ந்து பழிப்பர்; அந்தப் பழிநிலை அவனது பாவத்தை அளந்து காட்டுகிறது. பழியும், பாவமும் புகையும் தீயும் போல் நெருங்கிய தொடர்புடையது. ஒருங்கிய உறவாய் உறைந்திருப்பது.

நேரிசை வெண்பா

குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம் - அழித்துச்
செறிவழி நிற்பது காமந் தனக்கொன்று
உறுவுழி நிற்பது அறிவு. 29 நான்மணிக்கடிகை

குழியில் நீர்பெருகி நிற்பது போல் பழியுள் பாவம் பெருகி நிற்கும் என இது குறித்திருக்கிறது. பழி, பாவம் என இரண்டும் தொகையாய் வழங்கப்படுதலால் இவற்றின் நிலைகளையும் புலைகளையும் உணர்ந்து கொள்ளலாம்.

பழிக்கு நாணுகிற உணர்ச்சி மனிதனுக்கு உயர்ச்சியை அருளுகிறது; அது மழுங்கிய அளவு அவன் இழிந்து படுகிறான்.

இன்னிசை வெண்பா

பழியஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்
கொண்ட அருந்தவம் விட்டானும் – கொண்டிருந்(து)
இல்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர்
நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய். 79 திரிகடுகம்

பழிக்கு அஞ்சாதவன் உருவில் மனிதனாயினும் ஒரு மிருகமே; அவன் நல்ல நெல் அன்னம் உண்பது நவையாம் என நல்லாதனார் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் கூறியிருக்கிறார்.

பழி வழிகளை நாணி விலகாதவன் எவ்வழியும் இழிநிலையாளனாய் ஈனம் உறுகின்றான்; இவ்வாறு இழிந்து போகாமல் தெளிந்து விலகிச் சீர்மையாய் ஒழுகி உயர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-20, 12:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே