பெரிய மனிதன்

செல்வந்தன் பாக்கியராஜாவிற்கு பாராட்டு விழா.
திடல் எங்கும் சனக்கூட்டம். அங்கு பணக்காரர்களுக்கு மட்டும் ஆறு கால்கள். கதிரையின் கால்களையும் சேர்த்து.
வெயிலோ மழையோ எதுவும் தாக்காதவாறு அவர்களுக்கு மட்டும் கூடாரம்.
ஏழைகள் வேலிக்கு அப்பால். காவல்காரர்களின் கண்டிப்புடன் சிலர் தரையில் அமர்ந்திருந்தனர் பலர் நின்றுகொண்டிருந்தனர்.
மேடையில் மாலை மரியாதையுடன் கம்பீரமாக வீற்றிருந்தார் பாக்கியராஜா.
மேடையிலுள்ள ஒலி வாங்கி அவரது புகழ்மாலைகளை பல குரல்களில் வாங்கிக்கொண்டே இருந்தது.
ஒலி பெருக்கி ஊர் முழுதும் அவரது புகழை பெருக்கிக்கொண்டே இருந்தது.
ஒரு வர்த்தகர் 'ஒரு நாள் எனக்கு கடன்கொடுத்தவன் வட்டியை கேட்டு என் வீட்டுக்கே வந்துவிட்டான். வட்டியைக்கொடு இல்லையென்றால் உன் காரைக்கொடு என்று என் வீட்டிலேயே அமர்ந்துவிட்டான். எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்ன செய்வதென்று அறியாதபோது உடனே என் நண்பர் பாக்கியராஜா அவர்களின் புன்னகை நிறைந்த முகம் எனக்கு நினைவிற்க வந்தது. தொலைபேசியில் ஒரே ஒரு அழைப்புதான் கொடுத்தேன். அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் என் கடன்தொகை முழுவதையும் வட்டியோடு முடித்துக்கொடுத்தார். அத்தோடு தனக்கு அதை கடனாக திருப்பித்தரவேண்டாம். உங்கள் வியாபாரத்தில் என்னையும் பங்காளியாக இணைத்துக்கொள்ளுங்கள் என பெருந்தன்மையோடு கூறினார். இக்காலத்தில் ஆபத்தில் உதவும் நபர் இவரைப்போல் உண்டா.....' என மூச்சுவிடாமல் பேசிக்கொண்டிருந்தார்.
மேடையில் கரவொரலி தொடர்ந்து ஒலித்தது.
கூடாரத்திலிருந்தும் அதன் எதிரொலி பிறந்தது.
வேலிக்கு அப்பால் கந்தன் தன் தலையில் கையை வைத்துக்கொண்டு கலங்கிய கண்களோடு குந்தி அமர்ந்திருந்தார். 'உதவும் நபர் இவரைப்போல் உண்டா.....' என்று பலர் கூறும்போதும் இவர் மனதில் அன்று நடந்த சம்பவம் மட்டுமே நினைவுக்கு வந்துகொண்டிருந்தது.
'ஐயா, என்ட மகளுக்கு காய்ச்சல்னு சொல்லி ஆசுபத்திரிக்கு கொண்டுபோனேனுங்க. அங்க நம்ம ஊர் வைத்தியரைய்யா அவளுக்கு ஏதேதோ சோதன செஞ்சுட்டு இந்த மருந்து மாத்திரைகள வாங்கி வரச்சொன்னாரு. இன்னும் ரெண்டு மூணு சோதன செய்யனுமாம். டவுணுக்கு கூட்டிட்டுப் போங்கன்னு சொல்றருங்கையா.' என பாக்கியராஜாவின் வீட்டு வாசலுக்கு வெளியே நின்றுகொண்டு கேட்டார் கந்தன்.
'இப்ப ஒனக்கு எவ்வளவு வேணும். சீக்கிரமா சொல்லு. எனக்கு வேல இருக்கு.' தன் பணப்பையை திறந்துகொண்டே கேட்டார் பாக்கியராஜா.
'ஐயா மருந்துக்கு மட்;டுமே ஐயாயிரம் ஆகுமாம். டவுனுக்கு கூட்டிட்டு போயி வைத்தியம் பாக்கணும்னா எப்படியும் பத்து பதினைஞ்சாயிரம் போகும். ஒங்களுக்கு தெரியாததா ஐயா.....' என தலையை சொரிந்தார்.
'என்ன பத்து பதினைஞ்சா? பாவமேன்னு ரெண்டாயிரமோ மூவாயிரமோ கொடுத்து தொலைப்போம்னு நெனைச்சா, ஒனக்கு பத்து பதினைஞ்சு கேக்குதோ. உனக்கு அவ்வளவு பணம் கொடுக்குறதால எனக்கு என்னையா லாபம்? நீ திருப்பி தரவும் மாட்ட. கூலி வேல செய்யுற ஒன்னால அது முடியாது. இந்தா இந்த மூவாயிரத்த புடி. போய் மகளுக்கு தேவையானத வாங்கிக்கொடு.' என பணத்தை நீட்டினான்.
'சரி ஐயா ஏதாவது கொஞ்ச மருந்தாவது வாங்கிக்குறேன்.' கையை நீட்டினான்.
'பொறுப்பா.... அங்க என்ட பிசினஸ் கூட்டாளி ரெண்டு பேர் வர்றானுங்க. கிட்ட வரட்டும் தர்றேன். வாங்கடா வாங்க. எப்படி இருக்கீங்க? இவன் பேரு கந்தன். மகளுக்கு ஏதோ சுகமில்லையாம். அய்யோ குய்யோன்னு வந்து அழறான். ஆயிரமோ ரெண்டாயிரமோ கொடுங்கைய்யான்னு கால புடிச்சு கெஞ்சுறான். இவனுங்க மாதிரி ஆளுகளுக்கு நாம பிசினஸ்ல படுற கஷ்டம் தெரியவா போகுது. சோம்பேறியாவே கெடக்குறானுங்க. நமக்கோ இளகின மனசு. நம்ம ஊர்கரன்வேற. பாவமேன்னு அவன் கேட்ட ஆயிரம் ரெண்டாயிரம் ரெண்டையும் சேத்து மூவாயிரமா கொடுக்குறேன். இந்தா கந்தா வாங்கிக்க.' தற்பெருமையோடு நீட்டினார் பாக்கியராஜா.
'ஐயா நான் உதவிகேட்டுத்தான் வந்தேன். பிச்சகேட்டு இல்ல. எனக்கு காசு வேண்டாமையா' கந்தன் காசை தொடமறுத்தார்.
நண்பர்களுக்கு முன்னால் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்த பாக்கிராஜா, கந்தனின் கன்னத்தை தன் ஆத்திரம் தீர்க்கும் கருவியாக பயன்படுத்திக்கொண்டார்.
'ஏன்டா...... உனக்கு அவ்வளவு திமிரா? பிச்சக்காரப் பயலே..... ஒனக்கு ஒரு ரூபாகூட தரமாட்டேன். போடா இங்கிருந்து'
அடியை வாங்கி தரையில் விழுந்த கந்தன். எழுந்து தன் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த மண்ணை தட்டியும் தட்டாமலும் நடக்கத்தொடங்கினார்.
அதை நினைத்து மனம் கலங்கிக்கொண்டிருந்தார்.
தன் ஏழ்மையை உணர்ந்து தன் மகளின் வைத்தியத்திற்கு உதவிய அந்த ஊர் வைத்தியரை எண்ணினார்;. அவரை மேடையிலும் கூடாரத்திலும் அங்கிருந்தே தேடிப்பார்க்கிறார். அவரை எங்குமே காணவில்லை. தன் மனதில் 'பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான்யா!' என நினைத்து கண்களை துடைத்துக்கொண்டார்.

கற்பனைகள் யாவும்
எனக்கு சொந்தமானவை!
சித்திரவேல் அழகேஸ்வரன்

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (3-Dec-20, 5:04 pm)
Tanglish : periya manithan
பார்வை : 361

மேலே