அளவோடு உறவாடு
'வாசகர்களிடம் ஒரு விண்ணப்பம்
கவிதை முடிவுக்கு வரும் முன்
நீங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்!
– நன்றி!'
என் வாழ்வின்
பாதியை கொண்டாயே
என் அறிவுதனை
தற்காலிகமாய் கொன்றாயே
நிலவொளியோடும் இதமான
காற்றோடும் உன் அரவணைப்பு
உழைத்து களைத்த உடலுக்கு
எல்லை கடந்த மயக்கத்தை நல்கியது
உன் தீண்டலால்
இரவின் நீளமது கழிப்புற்றது
என் மேனியோ
மெய்நிலை மறந்து களிப்புற்றது
உன்னுடனான சங்கமம்
சோகம் மறந்த நிலையில்
சொர்க்கம் நுழைந்த
ஆனந்தத்தை உணர்த்தியது
நீ என்னுடல் மேவியதும்
ஒளியில்லா தருணத்திலும்
விழிகள் பார்வைதனை பெற்றன
கனவுலகே மெய்யுலகென தோன்றின
உன்னுறவால் எனக்குள்
புதிதாய் உற்சாகம் பிறந்தது
சில தெளிவிலா குழப்பங்களுக்கு
தீர்வுகளின் தாழ் திறந்தது
நீ என்னுள் நிறைகையில்
நான் ஒரு நிலையில்
உன் சேர்க்கை நிறைவடைகையில்
நான் வேறொரு நிலையில்
விரிப்புகள் களைந்ததறியாமல்
உனக்குள் தொலைந்துகிடந்தேன்
எனைமறந்து வளைந்துகிடந்தேன்
இறுதியிலே நெளிந்தெழுந்தேன்
என்னறைப் படுக்கையிலே
என்னைத் தழுவினாய்
ஒலி ஒளி பிறக்கையிலே
என்னைவிட்டு நழுவினாய்
கீற்றொளியோ கீச்சொலியோ
நம்மிணைப்பை இடையிலே பிரிக்குnனில்
முகஞ்சுழித்து ஒரு போர்வைக்குள்
ஒளிந்துகொண்டு உன்னோடிணைவேன்
சுமை குறைக்க
சுகமான தருணம் தந்தாயே
சுதந்திரமாய் எனைச் சேர் – ஆனாலும்
முகாந்திரமாய் என்னோடு தங்கிவிடாதே
முற்றாக ஒரு நாளேனும்
எனை பிரிந்து இருந்துவிடாதே
இருப்பினும் 'சோம்பேறி' எனும்
பட்டத்தினை எனக்கு தந்துவிடாதே
உருத்தலின்றி விழிகளுக்குள்
ஊடுறுவும் உறக்கமே......
உன்னிடம் உருக்கமாய்
அதுவொன்றே என் வேண்டுகோள்!