இரைச்சல்
இன்று
இரைச்சலின் அடர்த்தி
அதிகம்தான்;
ஏனோ
வாரவிடுமுறையன்று
இரைச்சலுக்கு
வெளிச்சம் கூடிவிடுகிறது;
நான்கு சாலைகள்
ஒன்றை இன்னொன்று
எதிர்நோக்கும் சந்திப்பு
இரைச்சலின்
சங்கமம் ஆகிவிட்டது;
சிக்னல் நிறம் மாற
நகரும் நொடிமுள்
சற்று வேகமாக
நகர்ந்தால்தான் என்ன?
காத்திருந்து பொறுமையிழந்தப்
பெருவாகனங்கள்
ஹாரனை அழுத்திப்
பிளிறுகின்றன;
இடையில் நுழைந்துசெல்ல
இடம் கிடைக்காமல்
இருசக்கர வாகனங்கள்
ஆக்சலரேட்டருக்கு உயிர்தந்து
உறுமுகின்றன;
உயரப் பறக்கையில்
மெல்ல எட்டிப்பார்த்த
சிறுபறவையொன்று
இவ்விரைச்சல் கண்டு
முகம் சுளித்தது,
'சத்தம்', 'சத்தம்' என்று!