அத்தை
#அத்தை
தந்தையுடன் பிறந்தவளைத் தாய்தான் என்பேன்
சந்திரனாய் எங்கள்வான் சுந்தர
மென்பேன்
வள்ளியென்பார் பலருக்கும் அவளே
அத்தை
வழங்கிட்டார் கடவுளந்த அன்புச்
சொத்தை.
அல்லும்பகல் உறங்காது காத்து நிற்பாள்
ஆராரோ பாடித்தான் தூங்க வைப்பாள்
தொட்டிலிலே ஆட்டிடுவாள் சுகமாய் அத்தை
கட்டிலென ஆக்கிடுவாள் மடியும் மெத்தை
முனிக்கதைகள் கூறிடுவாள் முகமும் சுருக்கி
மூங்கில் காட்டில் கண்டதுவாய்
பயமும் பெருக்கி
விழிப்பிதுங்கக் கேட்போமே வெடவெ டத்து
கழித்திடுவோம் காலமதைக் கிறுகி றுத்து. !
வக்கணையாய் சமைப்பாளே வாசந் தூக்கும்
வஞ்சிரமும் நண்டுஇறால் வாளை ருசிக்கும்
கைகளுக்குள் பக்குவந்தான்
கனத்துக் கிடக்கும்
கச்சிதமாய் சமையலுக்குள் கடத்தி வைக்கும்
வயிற்றுப்போக்கு வலிசுளுக்கு
வைத்தியம் பார்ப்பாள்
வரட்டிருமல் வந்துவிட்டால்
உச்சி யெடுப்பாள்.
காய்ச்சல்கபம் கண்டுவிட்டால் கலங்க மாட்டாள்
முருங்கை மஞ்சள் மூலிகையால்
முறித்திடுவாள்
படிப்பறிவு குறைவுதான் படிக்கச் சொல்வாள்
பள்ளிக்கூட வாசல்வரை கூட்டிச் செல்வாள்
சிரித்திருக்கும் சில்லறைகள் சுருக்குப் பையில்
சீனிமிட்டாய் வாங்கவரும் எங்கள் கையில்
அன்பிற்கு அளவில்லா அத்தை யம்மா
அருகாமை இருந்தவரை ஆனந்தம் தான்
புத்திமதி எம்முள்ளே புதைய லாக்கி
புகைப்படத்தில் அமர்ந்துவிட்டாள்
புன்னகைக் காட்டி..!
#சொ..சாந்தி