சாம்பலான கந்தகப் பூக்கள்

சாம்பலான கந்தகப்பூக்கள்

காகிதப் பூக்களாய்
கரிமங்களில் கரைகிறது
மெக்னீசிய பூச்சிகளின்
வாழ்வு ...!

தூக்கி வீசியெறியப்பட்ட
தூக்குச்சட்டிகள் கதைக்கின்றன
கஞ்சிக்கு வழியில்லாது
கருகிப் போன
கந்தகப்பூக்களின் வரலாற்றை..!

அந்தோ..! பரிதாபம்,
இரைதேடச் சென்ற
இருவாட்சிகள் எரிந்து
சாம்பலான செய்தியறியாது
வாசலோரம் காத்திருந்தது
குஞ்சொன்று ...!

மெட்டிகள் தேடுகின்றன
நெருப்புக்குள் தொலைத்த
ஒற்றைக்கால் செருப்பை..!

மத்தாப்புகள் சிரிக்கின்றன
மண்டையோடுகளை
விலை பேசுவதால்...!

பற்றியெரியும் பாஸ்பரஸ்
ரசாயன குவியலுக்குள்
புதைந்து விடுகிறது
நரகாசுரர்களின் விதிமீறிய
சதிகள் ...!

கருப்புநிற முதலைகளின்
விதிமீறலில் நீதிப்புத்தகத்தின்
கடைசிப் பக்கங்களில்
எழுதப்பட்டன
சில விட்டில்பூச்சிகளின்
தலை விதிகள் ..!

காப்பீடு பெறாத
கந்தகப் பூக்களை
பொசுக்கி விட்டு
தரைமட்டமான கட்டிடங்களுக்கு
நிவாரணம் எதற்கு ..?

எரிந்த கந்தகப்பூக்களின்
சாம்பல் பரப்பில்
எலும்புகளை கிளறி
வெந்து போன
சதைகளை தேடுகின்றன
கொன்றுண்ணிப் பாறுகள் ..!

செவ்வுடல்களின் மிச்சமீதி
எலும்புத்துண்டுகளை பொறுக்கி
ஈமச்சடங்குகளை செய்யும்
காக்கை கூட்டங்கள்
கடந்து போகின்றன
கந்தகப் புன்னகையை
அள்ளி வீசியெறிந்த வாரே ...!

தூரா.துளசிதாசன்

எழுதியவர் : தூரா.துளசிதாசன் (22-Feb-21, 11:55 am)
சேர்த்தது : Jacob
பார்வை : 105

மேலே