காணாதன கண்டேன்

மிருகத்துவச் சுரங்கத்தினின்று
மனிதத்துவ-மணமகள் - மாட்சி
மகத்துவத்தின் மணவறைக்கு
மகிமைநடை பயிலக்கண்டேன்...

சமுதாய்ப்பூத்தளத்தின் பற்பல
சம்பிரதாயப் பருவங்களில் சுடும்
வேதனைச்சூரியனால் மிக
வெந்துத்தோய்ந்த மனிதப்பயிர்கள்
அன்பின் நிழல்விரிப்பில் பூர்ண
அறப்புரட்சி புரியக்கண்டேன்...

'நம்பிக்கையின்மை' - அரக்கனுக்கு
நேற்றுவரை அடிமையாய்க்கிடந்த
இலட்சியப்பட்சிகள் இனிதாய்தம்
இலக்கெனும் சிறகுகளால் இன்ப
சுதந்திர சொர்க்கத்தையே முழுதும்
சுற்றிவரக்கண்டேன்...

அறிவின்மைப்பாலையில் பெரிதும்
அலுத்துப்போன மனிதமான்
சத்திய சுதந்திர நித்திய ஞான
சுயேச்சை அருவியில் நித்தம்
குளித்துக்குடித்துத் தணிந்து
குதூகலமடையக்கண்டேன்...

தூய்மைப்பூங்காவில் தூய
திவ்ய-சகோதரத்துவ-மலர்
இனிதாய் இளமையாய்
இதழ்விட்டுசிரிக்க உலவும்
ஒற்றுமைத்தென்றல் இறகுபோல்
ஒய்யாரமாயவளை தினம்
வாழ்த்தெனும் வண்ணங்களைத்தீட்டி
வருடிவிடக்க்கண்டேன்...

தமிழ்புலிகளும் அமைதி விரும்பும்
தைரியதிரவிய சிங்கள சிங்கங்களும்
பகைமறந்துதம் புது இலங்கைவீட்டில்
பொங்கல் கொண்டாடக்கண்டேன்...

பூணூலில் புன்னகைக்கும் 'பெரு'
பூஜாரி மகனுக்கும் - என்றும்
கழிவறையைச் சொர்க்கமாக்கும் 'சிறு'
'கந்தை' எனும் 'புனிதை'க்கும்
கல்யாணம் நடக்கக்கண்டேன்...

இராமரும் இயேசுவும் நபியும் நானக்கும்
இணைந்தே ஐக்கியமன்றசபையில்
நாடும் வீடும் நானில உயிர்களும் நாளும்
நட்பாய் வாழும் சாசனம் வரையக்கண்டேன்...

நண்பரே! இவைக் கனவல்ல - முழு
நம்பிக்கையெனுந் தூண்களால் - உள்
இதயத்தில் நித்திய நிமிஷயுகங்களில்
என்றென்றும் எழுந்தோங்கும் - பல
புதுயுகக்கோட்டைகளின் பிரளயப்
பிறவிக்கடல்-பிரதிபிம்பங்கள்...

வெற்றித்தேவதை
வசந்தத்தை நோக்கி
வெண்சிறக்கடித்து
வேகமாய்ப்பறக்கிறாள்...

இதயமெனும் நன்செய்யில்
இனிய நம்பிக்கைகளை விதைத்து
நண்பரே! வாருங்கள்! நித்யத்துக்கும்
நனவாக்குவோம் கனவுகளை...!!!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (5-Mar-21, 9:43 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 50

மேலே