நான் யார்
கருவாய்த்தாயின் தூய
கருவினிலே சிறு அன்யோன்ய
அணுத்துளியாய் அவதரித்த
அந்த விநாடித்துளிகளிலே...
இதயம் முதல் என் முழு மூல்ய
இரத்த-மாமிசமெல்லாம்
நிதம் கேட்ட கேள்வியே:
'நான் யார்?'
பிறப்புக்குமுன் பெரும் பவுத்த
புரியயிலா மௌனம்...
பிறந்ததும் பீதியால் பிறந்த
புது அழுகைப்பிரளயம்...
உடல் உள்ளமும் எந்தன் முழு
உள் சக்திகளும் ஒன்றாய்
நிர்ணயித்த நித்தியக் கேள்வியே:
'நான் யார்'...?
மழலைப்பருவ மென்மெல்லிய
மாறும் மாற்றங்களிலும்...
சிரித்து-அழும் சிறு-சிறு
சென்றுவரும் சேஷ்டைகளிலும்...
அடம்பிடிக்கும் அற்புத
ஆற்றல்களிலும் அன்றன்றும்
நிறைந்திருந்த நிரூபக் கேள்வியே:
'நான் யார்'...?
குமுறும் இளமையின்
குறுகுறுக் கொந்தளிப்புகளில்...
மதிமயங்கி மறந்துணரும்
மனம்நிறை மதிமாறாட்டங்களில்...
உள்ளெரியும் அக்னித்துண்டுகளுக்கு
உயிர்கொடுத்த ஊமைப்புரட்சிகளில்...
நிறைந்து வழிந்த நெபுலாக் கேள்வி:
'நான் யார்'...?
என் கவித்துவத்தின்
எழில் கவிதைகளின்...
என் மன-வீணையின்
ஏழேழு ராகசுரங்களின்...
என் உள்ளுயிரின் பல்
எண்ணிலாத்துடிப்புகளின்...
நிர்மல கேள்வியொன்றே:
'நான் யார்'...?
ஆதவனின் உதயம் முதல் - அவன்
அஸ்தமனமாகிடுங் காலத்தின்
ஒவ்வொரு நாள் பொழுதுகளில்
ஓய்ந்திடும் சூன்ய மாலைகளில்
பவுர்ணமிகளிலும் பூர்ணமாய்ப்
பவுசுவிடும் அமாவாசைகளிலும்
நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கேள்வி:
'நான் யார்'...?
நிமிஷங்களின் நதியருவிகள்
நடைபயின்று பெயர்ந்தன...
காலச்சக்கரங்களின் காலடிகளோ
காணாமலே மறைந்தொழிந்தன...
கால மாற்றங்களின் காதல்களும்
காவ்யங்களாய் மலர்ந்து ஜொலித்தன...
'நான் யார்...?' எனுங்கேள்வியே
நாட்கள் யுகங்களாய் நின்று நிலைத்தன.
விதிகளை விதைத்துவளர்பவனே!
விடைகூறுவாயோ?
தணியா என் இதயதாகத்தைத்
தணிக்க மறுப்பாயோ...?
ஜனன மரண அகர நகர என்
ஜாதகம்தான் சொல்வாயோ?
'நான் யார்...?' எனும் என் நிரந்தர
நீடிய விடம்பனைதான் தீர்ப்பாயோ...???