கொடை ஒருவன்பால் மூண்டுநின்றால் மற்ற இரிந்தொழியும் - கொடை, தருமதீபிகை 816

நேரிசை வெண்பா

குற்றங்கள் கோடி யுறினும் கொடையொன்று
முற்றி ஒருவன்பால் மூண்டுநின்றால் - மற்றவெலாம்
எல்லோனைக் கண்ட இருள்போல் இரிந்தொழியும்
நல்லோன் அவனேகாண் நன்கு 816

- கொடை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒருவனிடம் குற்றங்கள் கோடியிருந்தாலும் கொடை ஒன்றை அவன் பேணி நின்றால் அக்குறைகள் எல்லாம் மறைந்து சிறந்த குணவானாய் உயர்ந்து திகழ்வான்; ஆதவன் எதிரே இருள்போல் ஈதல் எதிரே இளிவுகள் ஒழிந்து போம் என்கிறார் கவிராஜ பண்டிதர். ஈகை எவ்வகையும் செவ்வையாய் ஒகையே புரிகிறது

கொடை அரிய பெரிய இனிமையுடையது; அதனையுடையவர் எவ்வழியும் புகழையே அடைகின்றார். பிழைகளையும் குறைகளையும் உலகம் வெறுக்குமாயினும் கொடையாளியிடம் அவற்றை எவரும் மறந்து விடுகின்றனர். மாசுகளை யெல்லாம் மறைத்து மனத்தையே விரித்தலால் கொடை உயர்ந்த குணமாய்த் தேசு வீசியுள்ளது. தாதா மாதா என்பது வேதமொழி.

காமம், கோபம், செருக்கு முதலிய சிறுமைகளைக் குற்றம் என்றது. மனிதனது பெருமையைக் குறுகச் செய்து சிறுமைப் படுத்துவது எதுவோ அது குற்றம் என வந்தது. சார்ந்த அழுக்கால் உடம்பு அசுத்தமாம், சேர்ந்த குற்றத்தால் உயிர் ஊனமாம். மாசு படிய மணியின் தேசு மழுங்குதல் போல் ஆசு படிய ஆன்ம ஒளி அழுங்குகின்றது. உயிரைப் பழுது படுத்தும் பிழைகள் பல வழிகளில் மருவி வருதலால் அவற்றிற்கு உரிமையான பெயர்கள் பல படிய நேர்ந்தன. சில அயலே வருகின்றன.

காசும் தவறும் கறையும் களங்கமும்
மாசும் வசையும் மறுவும் வடுவும்
ஆசும் புகரும் அரிலும் களையும்
ஏசும் பழியும் போக்கும் ஏதமும்
நறையும் வண்டும் கடவையும் நவையும்
மிறையும் பிழையும் விடலும் கரிலும்
தோமும் தப்பும் துகளும் புரையும்
கோதும் செயிரும் மையும் குற்றம்! - பிங்கலந்தை

குற்றத்தின் பெயர்களாய் இங்கே முப்பத்தொன்று வந்துள்ளன. யாவும் காரணக் குறிப்பாய் அமைந்தன. ஒரு பொருளைக் குறித்த மூல காரணங்களோடு பல பெயர்கள் வந்திருப்பது ஆய்ந்து சிந்திக்கத்தக்கது. நம் மக்களுடைய சிந்தனை நிலைகள் சிதைந்து போயின. நிந்தனைகள் நிமிர்ந்து வந்துள்ளன.

தமிழ் மொழியை ஆவலோடு ஆழ்ந்து கல்லாமலும், ஆதரித்துப் போற்றாமலும் தன்னை ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்ளுவது புல்லிய புன்மையாம். தமிழை அடைபுணர்த்தி வள்ளல், வேள் என இந்நாளில் வெளியே சிலர் பிலுக்கித் திரிவது இளிவான எள்ளல்களையே விளக்கியுள்ளது. வீணான வெளிப்பகட்டுகள் இளிப்படைந்து யாண்டும் இழிந்து ஒழிந்து போம்.

உண்மையான தன்மைகளை ஓர்ந்து தேர்ந்த போதுதான் நாடு செம்மையாய் நேர்ந்து செழித்து விளங்கும். நல்ல நீர்மைகளால் உள்ளம் உயர்ந்துவரின் அந்த மாந்தரை வையம் ஏந்தி மகிழ்கிறது. இனிய ஈகை தனி மகிமையாய் மிளிர்கிறது.

உள்ளி உள்ளவெல் லாமுவந் தீயுமவ்
வள்ளி யோரின் வழங்கின. மேகமே - இராமாயணம்

உண்மையான வள்ளல்களை இது உணர்த்தியுள்ளது! உள்ளி என்றது உள்ளத்தில் ஊன்றி உணர்ந்து உதவுகிற அந்நிலையை உணர்த்தி நின்றது.

உள்ளுதல் - நினைத்தல். எதை நினைப்பது? ஈட்டிய பொருள்நிலை, ஈகின்ற தன்நிலை, ஆகின்ற அற நிலை, அமைகின்ற அருள் நிலை முதலிய பல நிலைகளையும் ஆராய்ந்து எண்ணுதல் ஈதலுக்கு ஏதுவாய் வருதலால் அவ்வுள்ளல்கள் யாவும் உள்ளி என்னும் ஒரு சொல்லால் உணர வந்தது.

பொருள் அனுபவிப்பதால் தேய்கிறது; அனுபவியாமல் வைத்திருந்தால் மாய்கின்றது; ஒரு வேளை மாயாமல் அது மருவியிருந்தாலும் அதனை யுடையவன் மாய்ந்து போகவே அது அயலாரிடம் ஓடிப் போகின்றது. பொருள் எவ்வழியும் அழியும் இயல்பினது; அது அழியுமுன்னரே நல்ல வழியில் பயன்படுத்துபவர் நலம் பல காண்கின்றார். நிலையில்லாத பொருளால் நிலையுள்ளதைச் செய்து கொள்ளுகின்றவர் நிலையான புகழையும் தலையான இன்பத்தையும் அடைந்து மகிழ்கின்றார். தருபவன் தருமனாய்த் தருநிழல் உறுகின்றான்

பிறந்த போது மனிதன் இங்கே யாதும் கொண்டு வரவில்லை; இறந்து தொலையும் போதும் எதையும் கொண்டு போக முடியாது. இடையே சேர்ந்த பொருளை அனுபவிக்க நேர்ந்துள்ளான்; ஐம்புலன்களும் ஆரத் துய்ப்பதால் உடல் கொழுத்து வளருமே அன்றி உயிர் செழித்து வளராது; அருள் சுரந்து பிறர்க்குப் பொருள் உதவினால் அது புண்ணியமாய் வருகிறது; அதனால் கண்ணியங்கள் மிகுந்து உயிர் உயர் கதியை அடைகிறது.

உபகாரமான கொடை உயிர்களை உவகையுறச் செய்தலால் கொடையாளியை உலகம் உவந்து போற்றுகிறது. குணங்கள் பல நிறைந்திருந்தாலும் கொடாதவனை ஈயாத உலோபி என்று எள்ளி இகழ்ந்து தள்ளுகின்றது. ’உலோபம் அளப்பரும் குணங்களை அழிக்கும்’ எனக் கோசிக முனிவர் கூறியிருத்தலால் அதன் நீச நிலையை நேரே தெரிந்து கொள்ளுகிறோம்.

உத்தம குணங்கள் எல்லாம் உலோபத்தால் ஒழிந்து போதல் போல் குற்றங்கள் யாவும் கொடையால் மறைந்து போகின்றன. இனிய அமுதாய் ஈகை இன்பம் தருகின்றது.

நேரிசை வெண்பா

இடியோ டுறுமல் இசைந்தும் மழையைப்
படியோர் உவந்து பணிவார் - கொடிய
குறையுடைய ரேனும் கொடையொன் றுறினோ
நிறையுடைய ராவர் நிலைத்து.

கொடிய இடி குமுறல்கள் இருந்தாலும் மழையை உலகம் உவந்து புகழ்ந்து கொள்ளுதல் போல் சில குறைகள் இருந்தாலும் கொடையாளியை எவரும் மகிழ்ந்து போற்றுவர் என்பதை இதனால் உணர்ந்து கொடையின் உயர்வைத் தெளிகின்றோம்.

இன்னிசை வெண்பா

தாழைமுள் பாம்பொடு தானுறினும் அப்பூவைச்
சூழ்மணத்தாற் சென்னிமிசைச் சூடுப வீகையினான்
கீழ்குலத்தான் தீயார்க் கெழுமியா னாயினுஞ்சீர்
சூழ்தலான் வையந் தொழும்! 69

- ஈகை, இன்னிசை இருநூறு, அரசஞ் சண்முகனார்

முள், பாம்புகளோடு கூடி நின்றாலும் தாழம்பூவை யாவரும் உவந்து தலையில் சூடுவர்; கீழான தீயவர்களோடு சேர்ந்திருந்தாலும் ஈகையாளனை வையம் புகழ்ந்து தொழும் என இது உணர்த்தி யுள்ளது. உவமை நயம் ஊன்றி உணரத்தக்கது.

மனிதனுடைய குற்றம் குறைகளை மறைத்து அவனை மிகவும் மகிமைப் படுத்தியருளும் ஆற்றல் கொடைக்கு அமைந்திருப்பது அதிசய வியப்பாயுள்ளது. தன்னுயிர்க்கு இனிய பொருளைப் பிறவுயிர்கள் இன்புற உதவுகின்றானாதலால் அந்த அரிய தியாகம் பெரிய மேன்மையாய் உயர்ந்து ஒளிவீசி வந்தது.

Money is blood and life to mortals - Antiphanes

’பொருள் மக்களுக்கு உதிரமும் உயிருமாயுள்ளது’ என்னும் இது இங்கே உணர வுரியது. இத்தகைய அருமைப் பொருளை வள்ளல் வாரி வழங்குவதால் அந்த வண்மை அவனைத் தேவன் ஆக்கியருளுகிறது. புகழ் ஒளி வீசும் பொலிவு கருதிக் கொடையைச் சூரியனேடு நேர் வைத்தது’ கொடுத்து வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Apr-21, 9:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே