குலவீரர் அஞ்சுவரோ சீறிவெங் கூற்றுறினும் சென்று - வீரம், தருமதீபிகை 809

நேரிசை வெண்பா.

கொல்லத் துணிந்து கொலைஞர்கை வாளேந்தி
ஒல்லென்று வந்தும் உளம்கலங்கான் - சொல்ஒன்று
கூறிநின்றான் போசன் குலவீரர் அஞ்சுவரோ
சீறிவெங் கூற்றுறினும் சென்று! 809

- வீரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கூற்றுவன் கொதித்து வந்தாலும் உயர்ந்த குலவீரர் உள்ளம் அஞ்சார்; தன்னைக் கொல்லத் துணிந்து கொடிய வாள்களோடு சூழ்ந்து நின்ற கொலையாளிகளைக் கண்டும் போசன் யாதும் அஞ்சாமல் அவரை நோக்கி நீதிமொழி கூறினான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அஞ்சாமையும் நெஞ்சத் துணிவும் அருந்திறலாண்மையும் வீரத்தின் விளைவுகளாய் விளங்கி நிற்கின்றன. அச்சம் மனிதனைக் கொச்சை ஆக்குகிறது; அஞ்சாமை அவனை உச்ச நிலையில் உயர்த்தியருளுகிறது. ஒச்சங்கள் ஒழிய உச்சங்கள் விளைகின்றன.

உள்ளத்தில் குற்றம் உடையவரே அச்சமும் திகிலும் அடைகின்றனர். கள்ளம், கரவுகள் எள்ளல் இழிவுகளில் தாழ்த்துமே அன்றி ஏற்றம் தரா, கள்ளரிடம் சில சமயம் காணப்படுகிற துணிவு துணிவாகாது. புலி, கடுவாய் ஒநாய் முதலிய காட்டு மிருகங்களிடம் தோன்றுகிற திகிலான மூர்க்கம் போல் அவரிடம் கோரக் கொடுமை தோன்றுகிறது. உள்ளம் பழுதாய் இழிந்த பொழுது உயிர்ச்சத்தி ஒழிந்து போய் விலங்குகள் போல் எவ்வழியும் அவர் கலங்கி உழலுகின்றனர். பொல்லாத புலைத் துடுக்கை வீரம் என்று கூறலாகாது;

நல்ல தன்மைகளிலிருந்து நேர்மையாய்த் தழைத்து வருகிற உயர்ந்த உள்ளத் துணிவே வீரமாம். தரும நீதிகள் மருவிவரக் கருமம் புரிந்து வருவதாதலால் வீரம் தெய்வீக நீர்மையாய் மேவி நின்றது. சீரிய வீரம் தேவனாய்த் திகழ்கின்றது.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும். விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

வீர னைவிட முண்டனை விண்ணவர்
தீர னைத்திரு வண்ணா மலையனை
ஊர னையுண ரார்புர மூன்றெய்த
ஆர னையடி யேன்மறந் துய்வனோ! 7 - 004 திருஅண்ணாமலை, ஐந்தாம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

சிவபெருமானை வீரன் என்று அப்பர் இவ்வாறு குறித்துள்ளார்.

கலிவிருத்தம்
(மா புளிமா புளிமா புளிமா)

பேரா சையெனும் பிணியிற் பிணிபட்(டு)
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா! முதுசூர் படவேல் எறியும்
சூரா! சுரலோ கதுரந் தரனே - கந்தர் அநுபூதி

முருகப் பெருமானை வீரா! என்று அருணகிரிநாதர் இங்ஙனம் ஆர்வமோடு அழைத்திருக்கிறார். எமனே! வா என்கிட்டே, சத்தி வாள் கொண்டுன்னை வெட்டி வீழ்த்துவேன்' என்று எமனோடு இவர் வீர வாதம் கூறியிருத்தலால் இவரது ஞான தீரம் தெரிய வந்தது. வீரம் வர வெற்றி விளைகின்றது.

கட்டளைக் கலித்துறை

தண்டா யுதமும் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டா யடாஅந்த கா!வந்து பார்சற்றென் கைக்கெட்டவே! 25

பட்டிக் கடாவில் வருமந்த கா!உனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாதுவி டேன்வெய்ய சூரனைப்போய்
முட்டிப் பொருதசெவ் வேல்பெரு மாள்திரு முன்புநின்றேன்
கட்டிப் புறப்பட டா,சத்தி வாளென்றன் கையதுவே! 64 கந்தர் அலங்காரம்

வீர மூர்த்தியான முருகக் கடவுளை உபாசித்து வந்தள்ளமையால் அருணகிரியார் நேரே கூற்றுவனையும் போருக்கு அறை கூவி இவ்வாறு வீராவேசமாய் விருது கூறி வீறுடன் நின்றார்.

நேரிசை வெண்பா

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை. - நக்கீரர்

செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள!
குன்றாக் கொற்றத்துக் குறிஞ்சிக் கிழவ!
போர்மிகு பொருந! - திருமுருகாற்றுப்படை

முருகநாதனை நக்கீரர் இவ்வாறு வீரப் பேரால் துதித்திருக்கிறார். வீரம் எவ்வளவு மகிமையுடையது என்பதை இவற்றால் நன்கு உணர்ந்து கொள்ளுகிறோம். தெய்வ பத்தியும் சித்த சுத்தியும் அற்புத சக்திகளை அருளவே அவர் யாருக்கும் அஞ்சாமல் ஆண்டவன் போலவே நீண்ட மேன்மையில் நிலவி நிற்கின்றார்.

நாமார்க்கும குடிஅல்லோம்; கமனே அஞ்சோம்;
அஞ்சுவதும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை’

திருநாவுக்கரசர் இவ்வாறு உரைத்துள்ளார். பரம வீரனான இறைவனைப் பரவியுள்ளமையால் இவ்வளவு தீரமாய் வீர வசனங்களை அவர் பேச நேர்ந்தார். ஞான சீலமும் தரும நீர்மையும் மருவிய போது அங்கே அதிசயமான வீர ஒளி வீசி எழுகின்றது.

போசன் என்பவன் மாளவ தேசத்து மன்னன் மகன். மதிநலமுடையவன்; இளமையிலேயே தந்தை இறந்து போனமையால் சிறிய தந்தை அரசைப் பார்த்து வந்தான்; இவன் கலை பயின்று வருங்கால் வயது பதினாறு தொடங்கியது; பருவம் நிரம்பினால் இக்குலமகன் பட்டத்துக்கு வந்து விடுவான் என்று அக்கொடியவன் கெட்ட எண்ணத்தோடு கேடு சூழ்ந்தான். இவனைக் கொன்று விடும்படி சதி புரிந்தான்; பெரும் பொருள் வருவதை நினைந்து கொலைஞர் நால்வர் இசைந்தார். வேட்டைக்குச் செல்வதாக உல்லாச வினோதமாய் இரதத்தில் ஏற்றி இவனைக் காட்டுக்கு அழைத்துப் போனார். காட்சிகள் பல கண்டு வந்தான்; மாலை நெருங்கியது; ஒரு சோலையிடையே கொலை செய்ய மூண்டார். அந்நிலையை உணர்ந்த இவன் யாதும் அஞ்சாமல் அவரை நேரே நோக்கினான். ’என் சிறிய தந்தை சொல்லியபடியே நீங்கள் என்னைக் கொல்லலாம்; ஆனால் அவருடைய வாழ்வு நிலையாகுமா? புலையான பழி சுமந்து தொலையாத துயரடைய நேருமே! என்று வருந்துகிறேன்’ என இங்ஙனம் மொழிந்து உறுதியொடு ஒரு கவியும் பாடினான். அது அயலே வருகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா) (1, 5 சீர்களில் மோனை)

மனுமுதலோர் பலகோடி மன்ன(ர்)வந்திம் மண்ஆண்டு
..மாண்டே போனார்;
இனிதாக ஒருவருமிங் கிருந்ததில்லை; எந்தைமட்டும்
..இருப்பார் ஆனால்
மனமார எனதுயிரை வடிவாளுக்(கு) இரையிடுங்கள்
..மகிழ்ந்து நானும்
தனியாக இறக்கின்றேன் தளராமல் எறிமினென்று
..சாற்றி நின்றான். I

கொலைபுரிய மூண்டுகின்ற கொடியவர்கள் குலமகன்வாய்
..மொழியைக் கேட்டு
நிலைகுலைந்து நெஞ்சுருகி நெடியவாள் அயல்வீசி
..நேரே ஊர்போய்த்
தலைவனிடம் நிலைமையெலாம் தவறாமல் உரைத்துநின்றார்
..சதிபு ரிந்த
புலையவனும் ஓடிவந்து புதல்வனடி விழ்ந்தழுது
..புகல டைந்தான். 2 போசம்

நேர்ந்துள்ள நிலைகளை நேரே கண்டு ஈண்டு நெஞ்சம் வியந்து நிற்கிறோம். கொலை செய்ய மூண்டு கொடிய வாள்களோடு சூழ்ந்த போதும் இக் குலமகன் யாதும் அஞ்சாமல் நெஞ்சம் துணிந்து நேரே பேசியிருக்கிறான். இவனது திடதைரியம் கொலைஞரையும் வசப்படுத்தியது; கொடிய சதிகாரனையும் குணப்படுத்தியது. மனவுறுதி மனிதனை அதிசய நிலையில் உயர்த்துகிறது. மனோதிடத்தை தைரியலட்சுமி என்று முன்னோர் குறித்துள்ளமையால் உயிர்க்கு அது புரியும் உறுதிநலனை உணரலாகும். எதை இழந்தாலும் தைரியத்தை இழக்கலாகாது.

Wealth lost, something lost; honour lost, much lost; Courage lost, all lost. - Goethe

’செல்வம் இழந்தால் சிறிது இழந்ததாம்; மானம் இழந்தால் பெரிதும் இழந்ததாம், தைரியம் இழந்தால் எல்லாம் இழந்ததாம்' என கீத் என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் அங்ஙனம் கூறியிருக்றார். உறுதியான தைரியம் உய்தி தருகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-May-21, 9:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே