மந்திரச்சொல்

முதல் தொடுதல் அழகு
முதல் முத்தம் பேரழகு
என்னையே நான் அறியாத்தருணத்தில்
உன் முதல் முத்தம் பெற்றேன்
முதல் முத்தமிடுகையில் என்னென்ன நினைத்தாயோ?
அள்ளி அணைக்கையில்
துள்ளிக் குதித்தாயோ?
உன் உதிரத்தின் உணர்வெல்லாம் உயிர் பெற்றதாய் உள்ளம் களித்தாயோ?
உன் உடல் கண்ட வேதனைகளெல்லாம் எனைக்கண்டதும்
முழூவதும் மறந்தாயோ?
நிலவு காட்டி சோறூட்டிய நாள் தொடங்கி உன் நினைவுகள்
முடியும் வரையிலும் என்னை மட்டுமே நெஞ்சில் தூக்கி
சுமப்பவள் நீ
பள்ளிப்பாடம் தொடங்கி
பல நூறு கற்றுக்கொண்டேன் உன்னிடம்
பள்ளிக்கதை முழுதும்
பேசித்தீர்த்த காலம்
தொடங்கி நொடி தோறும்
உன் புடவை தலைப்புத்தான்
என் உரிமைக்கொடி
காலங்கள் கடந்தோடியது
வாலிப வாசலிலே
நம்மிடையே மெளனமென்ற இடைவெளியைய் ஒட்டிவிட்டேன் மெதுமெதுவாய்
போய் வருகிறேன் என்ற வார்த்தை கூட சுருங்கி வருகிறேன்
என்றாகி சில நேரங்களில் வெறும் தலையசைப்போடு முடிந்துபோனது
வெறுப்பாய் நான் பேசினாலும் வேடிக்கையாய் பேசினாலும் புன்னகையை மட்டும் பதிலாக தந்தவள் நீ
மணவாழ்க்கை தொடங்கி மனமுடைந்த பலவேளையிலும் உன் தழுவல்கள் தான் எனைத்தாங்கிப் பிடித்தது
ஆண்டுகள் கடந்த பின்னும் ஆதரவு வேண்டுமென்றால் சட்டென்று உனைத்தானே என் உள்மனது தேடுதிங்கே
ஒருபோதும் உன்னிடம் நான் தந்ததில்லை அன்னையர் தின பரிசுகள்
ஒளிதரும் கதிருக்கு ஒற்றை மெழுகுதிரி தந்தால் ஈடாகுமா?
இருக்கட்டும் தருகிறேன்
பரிசொன்று இன்று முத்தமென்ற பனித்துளியால் உன் ஒளிக்குள் கரைகிறேன்.
உணர்வு முழுசா ஒடஞ்சாலும் என் உயிர் சொல்லும் மந்திரச்சொல்
அம்மா......
அம்மா.......
அம்மா.........

எழுதியவர் : padmapriya (12-May-21, 5:53 pm)
Tanglish : manthirachsol
பார்வை : 206

மேலே