சக்தியும் சர்ச்சையும்

வானத்தையே வளைக்கும் அளவிற்கு பெண்கள் மகா சக்தி பொருந்திய வர்கள் என்றெல்லாம் போற்றும் உலகம் அதன் போக்கில் சக்தியை சங்கடத்தில் ஆழ்த்தாமல் விட்டதில்லை.மனிதர்கள் எப்பொழுதும் ஒரு பரபரப்பான சூழலையே தனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறார்கள் அதில் பெண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? பெண்கள் ஒவ்வொரு நாளும் சில ஆண்களால் தான் படும் இன்னல்களை வெளியில் சொன்னால் ஆண் என்ற ஒரு வர்க்கமே இந்த உலகில் பிறப்பிலேயே அழிக்கப்படுவர்.வீட்டின் வறுமையோ வெளியில் சொல்ல முடியாமல் தன் மனக்கூட்டில் போட்டு இயன்றும் இயலாமலும் தன் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டு கூலி வேலையோ,வீட்டு வேலையோ செய்யும் பாமரப் பெண்ணும் படித்து நல்ல வேலைக்கு போகலாம் என்று தன் பள்ளிப் பருவம் தொடங்கி கல்லூரி வரையிலும் எந்த ஒரு சிந்தனை சிதறலுக்கு இடம் தராமல் படித்து முன்னேறி ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் செல்லும்போது அங்கே ஒரு ஆளுமை பெண் சமுதாயத்தையே தனக்கு அடிமை என்று எண்ணி தன் அத்தனை திறமைகளையும் திரட்டி அவளின் ஆளுமையை அடக்கும் பேராற்றல் பெற்று இருப்பதாய் நினைத்துக் கொண்டு தனக்கு முடிந்த அத்துனை வித்தைகளையும் வார்த்தைகளாலும் பார்வையாலும் செயலாலும் தெரியப்படுத்தும் பொழுது அந்தப் பெண் அந்த நொடி தன் திறமைகளை காண்பிக்க இங்கே இருக்க வேண்டுமா இல்லை தன் தனித்துவம் இங்கு வெற்றி பெறாது என்று வெளியேற வேண்டுமா என்று நினைத்துத் தவிக்கும் நிலை இந்த உலகத்தில் எந்த ஆணும் பெறாத ஒரு அனுபவம்.பெற்றவர்கள் தன் பெண் பிள்ளைகளை பெண்மையின் மென்மை குறையாமல் வளர்த்து ஆளாக்கி சமுதாயத்தில் பெரிய பொறுப்புகளில் பார்க்க ஆசைப்படுவார்கள் அப்படி ஒரு சூழ்நிலையில் அலுவலகங்களில் பொதுவாக தனியார் நிறுவனங்களில் பெண்களின் அவலநிலை வாய்விட்டு சொல்ல முடியாது.எனது தோழி ஒருத்தி நல்ல அழகு,நல்ல பேச்சாற்றல் எந்த வேலை கொடுத்தாலும் மிகவும் நேர்த்தியாக செய்து முடிக்கும் திறன் கொண்டவள்.நாளுக்கு நாள் அவளின் கடின உழைப்பால் அந்த நிறுவனமும் நல்ல நிலைமைக்கே வர ஆரம்பித்தது.முதலாளியும் அவள் செயல்கள் கண்டு பாராட்டவும்,ஊதிய உயர்வும் அளித்தார்.முதலாளியின் அறையிலிருந்து வரும்போதெல்லாம் அவளின் முகபாவத்தையும் அவளின் நடவடிக்கைகளையும் உற்று நோக்கி கவனித்து ஒரு கூட்டம் அவளைப் பற்றி புரளிகளை கிளப்ப ஆரம்பித்தது அவளுக்கு அறியாமல் இருந்தது.நாளாவட்டத்தில் சக ஊழியர்கள் யாரும் அவளிடம் சரியாக பேசவில்லை.காணும் இடங்களிலெல்லாம் ஒரு வித முக சுழிப்பு,பரிகாச பேச்சுக்கள் இத்தனையும் இவளுக்கு சற்று வித்தியாசமான உணர்வையே அள்ளித் தந்தது.தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாதவள் சற்று குழப்பத்திற்கே ஆளானாள்.வரவேற்பாளர் தொடங்கி முதலாளியின் காரியதரிசி வரையிலும் ஒரு வித்தியாசமான போக்கையே அவள் உணர்ந்தவளானாள்.சக ஆண் ஊழியர்கள் சற்று ஒரு படி உயர்ந்து வார்த்தைகளால் அவளை புண்படுத்த தொடங்கினர்.பெண்ணாய் பிறந்திருந்தால் நாமும் நல்ல பேர் வாங்கலாம் மச்சான் ,எப்படி மச்சான் வீட்ல இருந்து இப்படி கிளம்பி வர்றாங்க,பல்லை காமிச்சு காமிச்சு என்னடா பேசுவாளுங்க இவளுகளால சும்மா இருக்குற ஆம்பளைகளும் கொஞ்சம் நிலைகுலையத்தானே செய்வாங்க இவளுகள யாரு திறமையை காட்ட சொல்றாங்க நமக்கு தெரியாததா இவளுக்கு தெரிஞ்சிரும் சும்மாவா மச்சான் இவளுக்கு எல்லா மரியாதையும்,பதவி உயர்வும்,ஊதிய உயர்வும் ஏதாவது கண்டிப்பா அவளுக்கும் அவருக்கும் புரிதல் இருக்கும்டா இல்லைனா இவளை இப்படி தலையில் தூக்கிவைத்து ஆடுவாரா மச்சான் அந்த அதிகாரி என்ற பேச்சுக்கள் காதில் விழ தன்னைப்பற்றி எத்தனை கேவலமான புரிதலைக் கொண்டு தன்னுடன் சிரித்துப் பேசி முதலாளியுடனான சந்திப்பின் தகவல்களைத் தெரிந்துகொண்டும் கற்பனை கதைகளை தன்னைச் சுற்றிப் பிண்ணி அதில் ஆனந்தம் கொண்டிருக்கும் சக ஊழியர்களை நினைத்து அவள் மனம் கொதித்துதான் போனாள்.வீட்டு சூழ்நிலை வேலை விட்டுச் செல்ல முடியாமல் தவித்த தவிப்பை வாய் விட்டு விவரிக்க முடியாது.தன் குடும்பத்திற்காக எத்தனையோ துன்பங்களையும் ,துயரங்களையும் தாண்டி ஒரு வேலைக்கு வரும்போது அந்தப் பெண்ணின் ஒவ்வொரு அசைவிற்கும் ஆயிரம் கதை சொல்லும் மற்ற மனிதர்களை எந்த கருவி கொண்டும் மாற்றி அமைக்க முடியாது அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கெல்லாம் ஒரு பெண் ஓடினால் அவள் அதள பாதாளத்திற்குள் தான் விழுந்து கிடப்பாள்.பெண்ணினத்தின் சக்தியை போற்ற இந்த பேரண்டத்தில் இன்னும் எந்த ஆணும் பிறக்கவில்லை அவளைக்கண்டு வியந்தே அவனின் ஆயுள் போகும் அவளை வென்று ஆயுள் போகாது.பெண்ணானவள் மென்மையின் இலக்கணம் தன் கோபப்பார்வையாலேயே அத்துனை பரிகாச பேர்வழிகளின் பார்வையையும் தன் நேர்கொண்ட பார்வையால் தலைகுனிய வைப்பாள்.பெண் உறுதியுடன் இருப்பதால்தான் தன் முன்னேற்றத்தை சுய கட்டுப்பாடுடன் அடைகிறாள்.சுயமான சிந்தனை இல்லாத பெண்ணை இந்த சமூகம் பல்வேறு பெயர் வைத்து பரிகாசம் செய்து கொண்டுதான் இருக்கும்.பெண் தன் சுய மரியாதையையும்,கெளரவத்தையும்,வீட்டு சூழலையும் பெரிதாய் நினைப்பதால் தான் அத்துனை அவமானங்களையும் தாண்டி தன் பெருமையை நிலை நாட்டுகிறாள்
.மங்கையரின் மகத்துவத்தை அறிய புரிய ஆண்கள் ஒரு ஜென்மத்தில் பெண்ணாய் பிறக்க வேண்டும்.தன்னை கடந்து செல்லும் பெண்ணை தன் பார்வையால் எடை போட்டு ஆயிரம் கற்பனை செய்து அவளை விமர்சிக்கும் ஆண் இனம் தன் வீட்டில் ஒரு பெண் வேலைக்குச் செல்லும்போது அவள் அடையும் துன்பத்தை பார்த்து தன் வாயடைத்து நிற்கும் .இனி வரும் காலங்களில் வீட்டில் அனைவரும் வேலைக்குச் செல்லும் நிலை வரும் பொழுது தன் பார்வையில் மாற்றத்தை கொண்டு வந்தால் பெண்ணிணம் இன்னும் சிறப்பாக இந்த உலகத்தில் உன்னத நிலையை அடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எழுதியவர் : நா.சந்தன கிருஷ்ணா (22-May-21, 9:02 pm)
பார்வை : 55

மேலே