உணர்வாய் தம்பி
உணர்வாய்த் தம்பி
*************************
வரலாற்றில் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வை
வரமாக வரக்கேட்டு வாட்டம் கொள்வாய்
வரலாற்றில் இடம்பிடிக்க வாய்த்த வாழ்வை
வரவேற்க மனமின்றி வாட்டி வைப்பாய்
தரமான தணைக்கின்ற தாகம் கொள்வாய்
தரமாக நீயெதையும் தானாய் செய்யாய்
உரமாவ தற்கெனவே உடல்வ ளர்த்து
உதவாதக் கரைபோன்றே ஊரில் வாழ்வாய்.
* *
பலபேரை ஏய்த்துண்ணும் பாடம் கற்பாய்
பழச்சாறாய் மதுபானம் பருகிக் கொள்வாய்
புலர்கின்ற நேரத்தில் போர்த்தித் தூங்கிப்
பொன்னான காலத்தைப் போக்கி வைப்பாய்.
சிலநாளில் முடிகின்ற சின்ன வாழ்வை
சிந்தித்து வாழாமல் சிதைத்து நிற்பாய்
உலகெங்கோ சென்றாலும் உன்னை நீயும்
உணராமல் தானெதிலும் ஒதுங்கிச் செல்வாய்.
**
முகநூலைக் கடலென்று முழுதாய் நம்பி
முத்தெடுக்க தினந்தோரும் மூழ்கும் தம்பி
அகநூலின் பக்கங்கள் அனைத்தும் செல்கள்
அரிக்கின்ற தனைநீயு மறிந்து கொள்வாய்
சுகமாகக் கழிகின்றச் சோம்பற் காலம்
சுவையாக இருந்தாலும் சூழும் இன்னல்
நகத்தோடு சதையாகி நாளை யுந்தன்
நல்வாழ்வில் விளையாடும் நன்கு ணர்வாய்.