ஒரு கருவின் ஓலம்
முடிவுறாத வார்த்தையின்
அருகில் போடப்படும்
கமாவாக என் வாழ்க்கை
தொடங்கியது கருவறையில்...
தான் உண்ட உணவு
தாய் எனக்கு உதிரமாக்கித்
தந்தாள், கருவறையில்...
உலகத்து அதிசயங்களை
தாயை கண்ணாடியாக்கி
பார்க்கிறேன், ஆச்சரியக்குறியோடு..
பறவைகளின் இசையும்
கானகீதங்களும், தாயை
காதுகளாக்கி ரசிக்கிறேன்
ஆச்சரியக்குறியோடு...
ஒன்பது மாதங்கள் ஓடி
பத்தாவது மாதம் தொடங்க
மருத்துவர்கள் கைவிரிக்க
என் பிறப்பே கேள்விக்குறியானது..
கருவாகி, உருவாகி
கடலாகி, பிரளயமென
வெளிவர யெத்தனித்தபோது
நான் நீர்க்குமிழென
அடங்கிப் போனேனே!
என் கண் மலர்கள்
மலருமுன்பே தூங்கிப் போனதே..
என் இதயமலர் வெளிவந்து
துடிக்குமுன்பே துவண்டு
போனதே...
முடிந்துவிட்ட வாழ்க்கையின்
முற்றுப்புள்ளியாக
ஜனனத்தின் கடைசி ஓட்டமாய்
வெளியேறினேன்,
வெற்றுச்சதைப்பிண்டமாய்..
ஜனனம் இல்லாத எனக்கு
மரணம் மட்டும் ஏன்?
மூச்சுவிடுமுன்னே
முற்றுப்புள்ளி எதற்கு?
விடைகேட்கப்புறப்பட்டேன்
விண்ணுலகிற்கு
கண்ணீரோடு....
___________________________