பசும்பொன் பரிசு
பசும்பொன் பரிசு
*******************
கூட்டுக் குடும்பக் குதூகலம் நீளுதல்
வீட்டுமனை யாள்தன் விருப்பு.
*
விருப்பு வெறுப்பிலா வீட்டார் மனத்தை
உருக்குவள் அன்பால் உவந்து
**
உவப்புடன் வாழ்வை உருண்டோட வைத்தே
கவலைகள் நீக்குவள் காண்.
**
காண்ப தெதையும் கலைநயமாய்க் கொண்டில்லம்
மாண்புறச் செய்குவள் மாது
**
மாதுளம் வைத்தே மனையறம் காத்திடத்
தீதுள வாழ்வுண்டோ தேடு.
**
தேடியவள் வாய்திறக்கத் தேன்வழியாப் போதினிலும்
பாடுமில்லப் பண்ணன்றோ பண்பு
**
பண்பில்லார் முன்னிலையில் பண்பாட்டைக் காப்பதில்
ஒண்டொடியாள் நிற்பாள் உயர்ந்து.
**
உயர்ந்த மனத்தொடு உற்றாரை நோக்கத்
தயங்கா தவள்தாரந் தான்.
**
தான்மட்டுந் தானெனும் தன்னல கர்வத்தை
வீணெனச் சொல்லும் விசும்பு.
**
விசும்பித் தனக்கென வேண்டுவதை க் கொள்ளாப்
பசும்பொன் மனைவாழ் பரிசு.
**
மெய்யன் நடராஜ்