நடுத்தெரு வாழ்க்கை
நீளும் தடைகளினால்
நிம்மதியி ழந்தமக்கள்
நாளும் புலம்புகின்றார் – கிளியே
நாவரண்டுத் தேம்புகின்றார்,
**
வாழ வழியுமின்றி
வாய்க்குண வேதுமின்றி
வீழ்ந்து தவிப்பரடி – கிளியே
வேதனையில் சாவரடி
**
வீட்டில் முடங்கிவிடு
வியாதியும் குறையுமென
நாட்டில் உரைத்தரடி – கிளியே
நம்பவிட்டுச் சாய்த்தரடி.
**
நாட்டைச் சுரண்டியுண்ணும்
நற்சுவையைக் கண்டவர்கள்
கூட்டில் அடைத்தரடி – கிளியே
கொள்கையை விட்டரடி
**
வாக்கு எடுப்பதற்கு
வனைந்தகதை அத்தனைக்கும்
நாக்குப் புரண்டதடி – கிளியே
நாம்வழுக்கி வீழ்ந்தமடி
**
ஏய்க்கும் இவர்களிடம்
ஏமாந்தக் கூட்டமென
நாய்க்குச் சமனானோம் – கிளியே
நடுத்தெருவில் வாழலானோம்.