பாட்டியின் இருமல்

பாட்டியின் இருமல்

பாட்டியின் இருமல்,
பலமான தொலைகாட்சி பெட்டி சப்தத்திற்கு நடுவில்;
படுத்தும் இருமல்

பழுத்த பழம் போடும் இருமல்,
பாட்டியின் லொல்லு லொல்லு இருமல்.

ஏதோ செய்தியின் சமிக்கை,
பாட்டியின் லொல்லு பாடியது,
கொல்லு கொல்லு இருமல்.

முடங்கிக்கிடந்த இருட்டு அறை,
முனகிடும் பேச்சி,
மூச்சிவிட தினரல்,
மொச்சைக் கொட்டைபோன்று, முழித்திருக்கும்
கண்கள்
பேச்சிக்கு ஆள்இல்லை.


பித்து பிடித்த தனிமை,
எதிர் தாளம் போட ஆள் இல்லை.

எப்பொழுதாது வரும்,
என்ன என்ன வேண்டும் என்ற கனத்த குரல்;
ஏதாவது சொன்னியா என்று அடுத்த குரல்;
பாட்டிக்கு வேலையே இல்லை என்ற சலிப்பு

எதுத்துக் கேட்க காது கேளாத பாட்டி,
செவிடு செவிடு என்ற மறுகுரல்

காலைநீட்டி கட்டையை சாய்த்துக்கிடந்தது பாட்டி;
முகத்தில் சுருக்கம்,
முடியாத வருத்தம்,
முதுமையின் தனிமை,
சுமக்கமுடியாத கொடுமை.

பிடிக்க ஆள் இல்லை,
பிடிப்பில்லாமல் பிணம்போன்ற வாழ்க்கை
பிடிவாதம் போக வில்லை.

தினித்திட்ட தனிமையின் கொடுமை,
தடுமாறும் நினைவுகள்,
அடுத்த குரல்.
சுமக்க முடியாத மனச்சுமை.

தண்ணீர் என்று கேட்கும் முன்,
தலைக்குமேல் தண்ணீர் பாட்டில்.
பசி என்பதற்குள்,
பசிமறுக்க பாட்டிலில் அடைத்த பிஸ்கட்.

வீட்டிற்குள் ஒரு சிறைவாசம்;
வெறுப்பைக் கக்கும் பெற்றோர் குழந்தைகள்;
நெருப்பைக் கக்கும் வார்த்தைகள்.

இருமாதே டீவி பார்க்க முடியலை,
அந்த தண்ணியை எடுத்து குடித்து தொலை
என்ற எதிர் வார்த்தை.

அதிகம் சாப்பிடாதே பிஸ்கட்,
அசிங்கம் போவிடுவே
அப்புறம் அவதிதான் என்ற குரல்

எதிரியிடம் இருந்து வரவில்லை,
எடுத்து தூக்கி வளர்த்த
உறவுகளிடம் இருந்து வந்தது
இந்த வார்த்தை.

கண்ணீருடன் வழியும் ஏக்கப்பார்வை,
பாட்டியின் தனிமையின் தேடல்!
தடுமாறும் கரங்கள்.

ஓடும் உலகம்! ஒடிந்த பாசம்,
தேடும் தேடல்,
தவிர்க்க முடியாத தனிமை,
நாகரீக ஓட்டத்தில் விற்கப்பட்ட பாசங்கள்.

வாட்டும் முதுமை;
வயோதிகக் கொடுமை;
வாயடைத்து கிடக்கும் மூதாட்டி;
கேட்பது உணவில்லை! உறவு!
ஒரு நொடி உறவு!

பாட்டியின் ஆசையை நிறைவேற்றியது தனிமை,
புரியாத ஜென்மங்கள்,
சுமையாக நினைக்கும் ஜடங்கள்,
ஓயாத இருமல்,
ஒருநாள் நின்றுபோனது இருமல்.

கிழட்டு ஜடம்தான்,
கேட்டது எல்லாம்,
தனிமையை விரட்ட,
பேச்சுத் துணைதான்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (4-Jun-21, 8:39 am)
Tanglish : paattiyin irumal
பார்வை : 31

மேலே