கொளத்துங்கர குல சாமி
கொளத்துங்கர குல சாமி
எங்கள் ஊரின் ஒதுக்குபுறமாக, கோடை காலத்திலும் வற்றாத பெரிய குளம் இருக்கிறது. குளத்தை சுற்றி சின்ன சின்ன சாமிகள். ஒழுகும் ஓலைக் குடிசையில், தன்னை தேடிவரும் பக்தர்களுக்காக வரம் தர காத்துக்கொண்டிறுந்தது. அழகா வரிசையா அடிக்கிவைக்கப்பட்ட கொளத்து படிக்கட்டுல ஒரு கல்லுதான் எங்க வீட்டுக் குலதெய்வம். அந்த படிக்கட்ட மெதிச்சு பலமுற அதுமேல நடந்திருப்பேன்.அப்பல்லாம் சாமியபத்திய நெனப்பு ஒருபோதும் மனதுல வந்ததில்ல.
வருடத்தில ஒருமுற தை மாதம். பெரும்பொங்கள். பொங்கல் முடிஞ்சு, காணும் பொங்கள் கழித்து, ஒரு நாள் அம்மாகூட கொளக்கரைக்கு போவோம். பொங்களிட்டு எங்க குல சாமிய கும்பிட. அம்மா பக்தியோட பொங்களிட்டு நான் படிக்கட்டா நெனச்சு பலமுற மெதிச்ச கல்ல தண்ணி ஊற்றி கழுவி, மஞ்சள் தடவி,குங்கும பொட்டிட்டு, மல்லிகைப் பூவால மலை போட்டு, ரொம்ப பய பக்தியோட கற்பூரம் ஏற்றி, நீர் விளவி, மண்டியிட்டு விழுந்து வணங்கிட்டு, என்னையும் கும்பிடுடான்னு சொல்லும்போதுதான், எனக்கு ஒரு தயக்கம் வரும். இருந்தும் வேகமா கீழவிழுந்து வணங்கிட்டு, அவசர அவசரமா திருநீரு,குங்குமத்த தாம்பூள தட்டிலிருந்து எடுத்து நெத்தியில இட்டுகிட்டு, அமைதியா நின்னுகிட்டிருந்தன். அப்பதான் என் கண்முன்னாடி அந்த அருவருப்பான காட்சி தெரிந்தது..
அம்மா புனிதமா நெனச்சு, சாமிய கழுவிய அந்த தண்ணிலதான் ஒருத்தர் ஒதுக்கு புறமா போயிட்டு கால் கழுவிகிட்டிருந்தாரு.அத பாத்தவுடனே என் மனதுக்கு வருத்தமா இருந்தது.இது தெனமும் நடக்கும்.எனக்கும் தெரியும்.ஆனா அம்மாவுக்கு படிக்கட்டு, குல சாமியா தெரியுது. குளத்து தண்ணி புனிதமா தெரியுது. அம்மா படிச்சு இருக்காங்க ஆனா சாமியபத்தின புரிதல் அவங்களுக்கு அதிகம் இல்ல.எல்லாம் முடிஞ்சு பொங்கள் பானைய கூடையில எடுத்து வைச்சுகிட்டு மன நிம்மதியோட வீட்டுக்கு கிளம்பினாங்க.
எனக்கு மட்டும் மனசுல ஒரு கேள்வி இருந்துகிட்டே இருந்தது.
நம்ம குலசாமி மட்டும் ஏன் இங்க இருக்கு.ஒதுக்கு புறமா…ஓரமா அதுவும் அவசரத்துக்கு காலையில ஒதுங்கிற இடத்தில இருக்கு.வேர யாரும் குளக்கரைக்கு வந்து படிக்கட்ட சாமியா வணங்கிறவங்க இல்ல. இத மாத்தனும்ன்னு அப்பதான் முடிவுபன்னன்…..அதே நெனப்போடு வீட்டுக்கு போனேன்.
காலம் வேகமா போயிகிட்டே இருந்தது.
அரசாங்கம் குளத்த தூர் வார ஏலம் விட்டாங்க.
ஏலம் எடுத்தவங்க வேலைய ஆரம்பிச்சாங்க.
குளத்துக்குள்ளிருந்து தூர வெளி எடுத்துகிட்டு வர வழி சுலபமா இல்ல.அதனால படிக்கட்டுமேல மண்ண சரிவா போட்டு அழகான பாதையா மாத்தினாங்க. அம்மாவோட குலசாமி மண்ணுக்குள்ள புதைஞ்போச்சு.
வேல தொடர்ந்து நடந்தது.
ஜய்ப்பர்சில அடமழையா பொழிந்து, கார்த்திகையில கனமழையா பொழிஞ்சவுடன். குளமுழுவதும் நிரைந்திருந்தது மழையின் தண்ணீர்.மனதுக்கு இதமாக இருந்தது இந்த காட்சியை பார்க்கும்போது.
அம்மாவும் அடிக்கடி குளக்கரைக்கு சென்று துணி துவைத்துக்கொண்டு வருவாள். அப்போதெல்லாம் அவளுக்கு குலதெய்வம் பத்தின நெனப்பு கொஞ்சமும் இருக்காது.
மார்கழி முடிந்தது.
தை முதல் நாள் பிறந்தது.
பெரும் பொங்கள்,மாட்டுப்பொங்கள் முடிந்து, காணும்பொங்கள் அன்று கவலையோடு இருந்தாங்க.
”என்னம்மா..ஒரே சோகமா இருக்க” என்றேன்.
” நாளைக்கு குளத்தங்கரையில அம்மச்சார் பொங்கள் வைக்கனும்”
“அதுக்கு “ சின்ன சிரிப்போடு அம்மாவை பார்த்தேன்.
“ நம்ம சாமிமேல மண்ணபோட்டு மறச்சுட்டாங்களேடா…” என்று சோகமாக சொன்னபோது….
அந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன்…..
” சரிடா.. அம்மச்சார் சாமிய நாளைக்கு நம்ம வீட்டுலே கும்பிடலாம்” என்ற பகுத்தறிவுடைய பதில் என்னை பரவசப்படுத்தியது.