இணையவழிக் கல்வி

...

“இணையவழிக் கல்வி- இனி இதுதான் வழி”

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என கல்வியின் சிறப்பை இயம்பும் வள்ளுவனின் வாக்கை முழுதாய் உணர்ந்த நம் மூத்தக்குடிகள், கல்வியை குருகுலம் மூலமும் பின்னர் திண்ணைப் பள்ளிகள் மூலமும் போதித்து வந்தனர். சங்க காலம் மற்றும் சங்க மருவியக் காலங்களில் கல்வியை போதிப்பதில் தமிழ்ச் சங்கங்கள் பெரும்பங்கு வகுத்தன . இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் வேரூன்றத் தொடங்கியப் பின்னரே பள்ளிக்கூடங்கள் கல்வி போதிக்கும் இடங்களாக மாறின. கிறித்துவ மெஷினரிகளால் கல்வி அனைவருக்கும் பொதுவாகி, நாடு முழுவதும் பாடத் திட்டங்களுடன் ஒரு முறையானக் கல்வி போதிக்கப்பட்டது. காலத்திற்கும் , தேவைக்கும் , அறிவியல் முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப கல்வித்துறை பல மாற்றங்களை அடைந்தே வளர்ந்துள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றங்களால் தகவல் தொடர்பு மிகவும் முன்னேறிய நிலையில் அதை கல்வித்துறையிலும் புகுத்துவது அவசியமானதாகிவிடுகிறது. இணையதளம் மூலம் தொழில் பயிற்சி மற்றும் முறைசார கல்விப் பயிற்சி , கலை சார்ந்த பயிற்சி வகுப்புகள், சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வெற்றிகரமாக நடந்துவருகிறது. ஆனால் அவை மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே எட்டும் கனியாக இருந்து வருகிறது.

2020 ஆண்டு தொடக்கம் முதலே வேகமாகப் பரவிய கொரோனா தொற்றுக் காரணமாக உலகமே ஸ்தம்பித்த நிலையில் கல்விக் கூடங்கள் அனைத்தும் ஓராண்டிற்கும் மேலாய் திறவா நெடுங்கதவாய் மூடப்பட்டுள்ளன. குழந்தைகள் வீட்டுக்குள்ளே முடங்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. குழந்தைகளின் கல்வி பெரும் கேள்விக்குறி ஆகிவிட்டது. எனவே சில தனியார் பள்ளிகள் இணையதளவழி வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி முடிந்தவரை அந்தந்த வகுப்பிற்கான பாடத்திட்டங்களை அதற்கான ஆசிரியர்கள் மூலம் நடத்திவருகின்றன. இவை வகுப்பறை சூழலில் கற்கும் நிறைவை தராவிட்டாலும் ,ஓரளவு பாடத்துடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்து ,அதுவரை கற்றவைகளையும் நினைவுபடுத்திக்கொள்ள பெரிதும் உதவுகிறது. பெற்றோர்களின் ஐயப்பாட்டையும் போக்கி ஒரு நம்பிக்கையை விதைத்தது. கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் ஓரளவிற்கு ஈடேறியது.

பொதுவாக தினமும் இரண்டு மணிநேரம் இணையவழிக் கல்வி நடத்தப்படுகிறது. குழந்தைகள் காலையிலே பள்ளிக்குத் தயாராவது போலவே அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்கு புத்துணர்வுடன் தயாராகி கணினித் திரைமுன் ஒரு கட்டுப்பாடுடன் அமர்கின்றனர். தங்கள் ஆசிரியர்களிடம் நேரடியாக உரையாடி ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்துக்கொள்கின்றனர். மேலும் வீட்டில் பெற்றோர் கண்காணிப்பில் வகுப்புகள் நடைபெறுவதால், கற்பிக்கும் ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை தயார் செய்து சிறப்பானமுறையில் கற்பிக்கின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் செயல்பாடுகளுடன் தொடர்புடைய உரையாடல்களில் எந்த பாரபட்சமும் இன்றி சமமான பங்கேற்பும் அளிக்கப்படுகிறது.

எனவே இந்தக் கொரோனா தொற்றுக் காலத்தில் இணையவழிக் கல்வி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
ஆனால் இது அத்தனை குழந்தைகளுக்கும் கிட்டுகிறதா என்றால், இன்றைய நிலையில் நிச்சயமாக இல்லை. காரணம் தமிழகத்தில் 8% வீடுகளிலேயே இணையதள வசதிகள் உள்ளதாய் அறியப்பட்டுள்ளது. அனைத்து இல்லங்களில் கைப்பேசி இருந்தும் அது முழுமையாக இணையவழி கல்விக்கு பெரியதாய் உதவாது. அதுமட்டுமின்றி கல்விக்கூடங்கள் சொல்லும் செயலிகளை பதிவிறக்கம் செய்து அதற்காக அவர்கள் வழங்கும் கடவுச் சொல்லை பயன்படுத்தி இணையத்தில் இணைவதற்கு படித்தப் பெற்றோர்களே திண்டாடுகின்றனர். மேலும் கற்றலில் பெற்றோர்களின் பங்கு மிகவும் கூடுதலாகி உள்ளது. இணையவழி வகுப்பிற்குப் பின்பு கற்றல் தொடர்பான செயல்பாடுகளுக்கும் பெற்றோர்கள் வழிகாட்டுதலாக இருப்பது மிகவும் அவசியமாகிறது. இணையதள வசதி சீராக இல்லை என்றால் கற்றல் கற்பித்தல் தடைபட்டு தடைபட்டு குழந்தைகளால் முழு கவனத்துடன் கல்விகற்க இயலாத நிலை ஏற்படுகிறது. ஒரேவொரு அறை உள்ள வீட்டுச் சூழலில் குழந்தைகளினால் இணையவழியில் கற்பது மிகச் சிரமம் . மேலும் பெருகிவரும் தொற்றால் ஏற்பட்டுள்ள மன அழுத்த சூழல் பலர் இல்லங்களில் மேலோங்கி உள்ளது. எனவே பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் கிராமப்புற சாமானியர்களுக்கு இணையவழிக் கல்வி என்பது வெறும் கனவே.

கொரோனா போன்ற பெருந்தொற்று எதிர்காலத்தில் ஏற்படலாம். பாடங்களை இணையதளத்தில் நடத்திவிட்டு , செயல்முறைகளுக்கு மட்டும் பகுதிநேரமாக பள்ளிகளை இயக்கி பயிற்சி அளிக்கும் நிலை ஏற்படலாம் .
கல்வி தடையின்றி நடந்தேற , தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் கல்வி கற்க, கல்வித்துறையில் ஏற்றத்தாழ்வுகள் மறைய, அரசு இப்போதே தொலைநோக்குச் சிந்தனையுடன் திட்டங்கள் தீட்டவேண்டும். அனைத்து கிராமப்புறங்களிலும் இணையதள வசதிகளை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திற்கான செயலியுடன் மடிக் கணினிகள் வழங்கப்பட வேண்டும். அனைத்துப் பாடங்களும் மின்புத்தகங்களாக வடிவமைக்கப்படல் வேண்டும். கணிணியை இயக்க அடிப்படை பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். இணையதளத்தை குழந்தைகள் தவறாக பயன்படுத்தாத வகையில் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் மிகுந்த எச்சரிக்கைக் கொண்டு குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்.
காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் அவசியம்.
கல்வித்துறையிலும் அதை புகுத்தல் உசிதம்.
இணையவழிக் கல்வியில் உள்ள பாதகங்களை களைவோம்... பெற்றோர் ஆசிரியர்கள் இணைந்த வழிகாட்டுதலுடன் சிறப்பாய் அதை நடைமுறை படுத்துவோம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி
தாளாளர்
திரி ஜெகன் மோகன் நடுநிலைப்பள்ளி

எழுதியவர் : வை.அமுதா (16-Jun-21, 9:50 am)
பார்வை : 9723

சிறந்த கட்டுரைகள்

மேலே