விளிம்புகள்

விளிம்புகள்
_______________________________ருத்ரா.

என் மனப்படலம்
ஒரு நீலவானம்.
அது சஹாராவின்
மணற்கடல்.
அலையாயும்
குவியல் மேடுகளாகவும்
மணல் பாளங்கள்.
இவை என் கனவு முகடுகள்.
இவை யாவும் அவள் முகம்.
மாறிக்கொண்டே இருக்கும்
அவள் புன்சிரிப்புகள்
என்னைத்தூரிகையாக்கி
பதிவுகள் இடுகின்றன.
என் காத்திருப்பின் நீண்ட யுகங்கள்
அந்த மணல் படுகைகளின்
அடி வயிற்று கற்பரல்களின்
நரம்புக்கணுக்களில்
முடிச்சு போட்டுக்கொண்டிருக்கின்றன.
அவள் சிரிப்புகளோடு
என் சிரிப்புகளும்
சங்கமம் ஆகும் அபூர்வ‌
திட்டுகளில்
அதோ பாருங்கள்
வண்ண வண்ண
சித்திரப்புடைப்புகளில்
நீண்டடொரு மம்மியில்
கிடப்பதை.
வரலாற்று ஆசிரியர்கள்
கபாலங்களை தட்டிப்பார்க்கிறார்கள்.
அவளும் நானும் சேர்ந்து
மீட்டிய மகர யாழ்
அங்கே அதிர்கிறது.
எங்கள் இதயக்குவளைப்பூக்கள்
உயிர்த்தேனை
வழிய விடுகிறது.
நீல ஆறு எனும் நைல் ஆறு
அவள் முந்தானையாய் படர்கிறது
என்னை போர்த்திக்க்கொண்டு.
கரையோரத்து
பைப்பரஸ் புல்கற்றையில்
எழுதியிருக்கிறோம் எங்கள் கவிதையை.
அந்தியின் ரத்தம் வழிய‌
எங்கள் உயிர் மெய் எழுத்துக்கள்
மெகந்தி பூசிக்கொள்வது அந்த‌
வான விளிம்புகளில்
மினுக்கிக்கொண்டே இருக்கின்றன.

________________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (19-Jun-21, 12:31 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 42

மேலே