கரு சுமக்கும் காலம்…
சூழ் கொண்ட நாள் முதலாய்
சுற்றிக்கொண்டது சந்தோசம் …
நஞ்சுக்கொடி ஒட்டிக்கொள்ள
ஒரு பிடி சோறு கூடுதலாய் உனக்காக ..
உன் இதயம் துடிக்க
தூள் தூளானது என் சோகம்…
மூளை முளைத்ததும்
முழுதும் ஆட்க்கொண்டது உன் மோகம் …
கை,கால் முளைத்ததும்
நின் இருப்பை அறிய வைத்தது உன் ஆட்டம் …
காது கொடுத்து கேட்க ஆளில்லாமல்
அரற்றி கொண்டிருந்த என் பேச்சை
கேட்டு கை கால் ஆட்டி ஆர்ப்பரித்தது உன் அசைவு …
அம்மாவின் பேச்சுக்கு கைக்கொட்டியது
பிள்ளை என பிதற்றலாய் பெருமை கொண்டது
என் பெண்மை …
உள்ளுக்குள் உன் வளர்ச்சி ,
உடல் பெருத்த என் உற்சாகத்தின்
உரமாய்….
எடை கூடி என்னை மாற்றியவை எல்லாம்
நீ எட்டி பார்த்த அந்த நிமிடம்
எங்கே போனது என தெரியவில்லை …
எத்தனை வலிகள் வந்தாலும்
இன்னும் ஒருமுறை உன்னை சுமக்க
ஆசை கொள்கிறது என் தாய்மை …
இத்தனை இன்பம் தந்து
இடைப்பட்ட கவலை தீர்த்து
இணையாய் இன்னும் இருந்திட
சுகங்கள் தொலைத்தாலும் , என் பெண்மையை
இறுமாப்பு கொள்ளவைக்கும் நின்னை
ஜனிக்க காத்திருக்கும் கர்ப்ப காலமும்
ஒரு சுகம் தான் …
இவன்
மகேஸ்வரன் கோ(மகோ)
+91 -9843812650
கோவை-35