நிலைத்த புகழொடு நீடு வாழ்கிறார் கலைஞர் பொது தலைப்பு அரசியல் பணிகளால் கவிஞர் இராஇரவி
நிலைத்த புகழொடு
நீடு வாழ்கிறார் கலைஞர் அரசியல் பணிகளால்!
கவிஞர் இரா.இரவி
வெற்றி வந்த போதும் என்றும் ஆடாதவர்
தோல்வி வந்த போதும் அன்றும் வாடாதவர்!
ஒன்றிய அரசியலிலும் நன்றே கால் பதித்தவர்
ஒன்றிய அமைச்சர்களையும் பெற்று வென்றவர்!
நாகரீக அரசியலை நாளும் நடத்தியவர்
நாடாளும் திறமையை நயமாக நிகழ்த்தியவர்!
சட்டமன்றத்தில் முதல்வராக முத்திரை பதித்தவர்
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் நின்றவர்!
எழுத்து, பேச்சு இரண்டிலும் வெற்றியை நாட்டியவர்
எது நடந்தபோதும் எதற்கும் அஞ்சாத வீரர்!
மாற்றுக்கட்சியினரை மதித்து நடந்தவர்
மாற்றுக்கட்சியினரும் மதிக்க நடந்தவர்!
தேர்தலில் என்றும் தோல்வியின்றி வென்றவர்
தேர்தலில் தோற்காத வேட்பாளராக சாதித்தவர்!
அரசியலில் சாணக்கியர் என்று பெயர் பெற்றவர்
அரசியல் வித்தகராக எந்நாளும் வலம் வந்தவர்!
அறிஞர் அண்ணாவின் இதயத்தில் இடம்பிடித்தவர்
அருகே மெரினாவிலும் இடம்பிடித்து வென்றவர் !
போராட்டங்களில் தனிவழி வகுத்து நடந்தவர்
போராட்டத்தை இறந்தபின்னும் நடத்தி வென்றவர்!
திட்டங்கள் பல தீட்டி அரசியலில் வென்றவர்
திட்டியவர்களும் பாராட்டிட திட்டங்கள் வகுத்தவர்!
அய்ந்து முறை தமிழக முதல்வராக இருந்தவர்
ஆழியாத வரலாற்றை அரசியலில் விதைத்தவர்!
நடிகவேள் இராதா வழங்கிய பட்டம் கலைஞர்
நடிப்பில் நடிகர் திலகம் சிறக்க வைத்த வசனகர்த்தர்!
உடன்பிறப்புகளுக்கு கடிதம் முரசொலியில் எழுதி
உடன்பிறப்புகளை ஒற்றுமைப்படுத்திய அரசியல்வாதி!
பதினான்கு வயதில் தொடங்கிய அரசியலை
தொன்னூற்று நான்கு வயது வரை தொடர்ந்தவர்!
இந்தித் திணிப்பை என்றும் எதிர்த்து வந்தவர்
இந்தி ஆதிக்கத்தை என்றும் தடுத்து நிறுத்தியவர்!
தந்தைபெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவர்
அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை கொண்டு வந்தவர்
சமூக நீதி காப்பதில் தன்னிக்ரற்றவராகத் திகழ்ந்தவர்
சமத்துவபுரங்கள் அமைத்து சமத்துவம் கண்டவர்!
உழவர் சந்தை திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்
உழவர்களின் வாழ்வில் இன்ப ஒளி ஏற்றியவர்!
காவிரிக்காக கண்டனக்குரல் என்றும் தந்தவர்
கர்னாடகத்துடன் போராடி காவிரி நீர் பெற்றவர்!
அரசியல்வாதிகளுக்கு இலக்கணமாக வாழ்ந்து சிறந்தவர்
அரசியலில் மாண்புகள் காத்து வந்தவர்!
அண்ணாவிடம் கற்ற அரசியல் பாடத்தை
அணுவளவும் மாறாமல் நடத்தி வென்றவர்!
கடமை கண்ணியம் கட்டுப்பாடு தாரக மந்திரத்தை
கலைஞர் என்றும் கடைபிடித்தார் அரசியலில்!
--
.